மேலும் அறிய
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி உத்திர கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பங்குனி உத்திர கல்யாண உற்சவம்
Source : ABP NADU
காஞ்சிபுரம்: பிரசித்தி பெற்ற பிரார்த்தனை தலமான வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மகா கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது கல்யாண பிரார்த்தனை தலம் என்பதால் திருக்கோயில் சார்பிலும் உபயதாரர்கள் சார்பிலும் அடிக்கடி கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த உற்சவத்தில் திருமணமாகாத பக்தர்கள் கலந்துகொண்டு கல்யாண பாக்கியம் பெறுகின்றனர். அதனால் பக்தர்கள் வருகை நாளுக்குநாள் இத்திருக்கோயிலில் அதிகரித்து வருகிறது. இங்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் பௌர்ணமி திதியும் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் சிறப்பானதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளில் சிவன் பார்வதி, இராமன் சீதை, முருகன் தெய்வானை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாய் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாளில் தமிழகம் முழுதும் உள்ள திருக்கோயில்களில் கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அன்று திருமணம் செய்து கொண்டால் வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை. அதனால் அன்றையதினம் பெரும்பாலான நபர்கள் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாய் கொண்டுள்ளனர்.
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலுக்கு இந்திரன் வந்து வணங்கி இந்திராணியை திருமணம் செய்துகொண்டதால் இங்கு அவ்வப்போது நடைபெறும் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு பலபேர் கல்யாண பாக்கியம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாயன்று மாலை பங்குனி உத்திர கல்யாண உற்சவம் விமரிசையாய் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மயில் மண்டபத்தில் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு அங்கு மாவிலை தோரணங்களும் வண்ண மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. செவ்வாய் மாலை 5 மணிக்கு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மல்லிகை, சாமந்தி, ரோஜா மலர் மாலைகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்தில் உள்ள அலங்கார பந்தலுக்கு மாலை 7 மணிக்கு முருகப்பெருமான் எழுந்தருளினார். கல்யாண வரம்வேண்டி திரளான பக்தர்கள் மாலைகளுடன் அங்கு கூடிருந்தனர். முன்னதாக கல்யாண சீர்வரிசை பொருட்கள் கருவறையில் பூஜிக்கப்பட்டு எடுத்துவரப்பட்டன.
திருக்கோயில் தலைமை அர்ச்சகர் சந்திரசேகர் குருக்கள் தலைமையில் ஆறு அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதினர். மங்கலவாத்தியங்கள் ஒலித்திட இரவு 8 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மணாளனுக்கு அரோகரா தெய்வானை நாயகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் வணங்கினர். பிறகு அவர்கள் கொண்டு வந்த மாலையை முருகப்பெருமான் திருவடியில் சமர்பித்து பூஜிக்கப்பட்டு பிறகு அர்ச்சகர் கையிலிருந்து பெற்று தாங்கள் அணிந்து கொண்டனர்.
அதன்பிறகு கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் திருக்கோயில் பிரகாரத்தில் வலம்வந்து புதியதாக செய்யப்பட்ட மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 9.30 மணிக்கு புதிய மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வல்லக்கோட்டை கிராமத்தில் திருவீதி உலா வந்தார். இதனை முன்னிட்டு வண்ண வான வேடிக்கைகளும் நடைபெற்றன. கல்யாண உற்சவத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண அட்சதை, சர்க்கரை பொங்கல், கதம்பசாத பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பங்குனி உத்திர கல்யாண உற்சவ உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை அவர்கள் அறிவுரையின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், கூடுதல் பொறுப்பு நிர்வாக அதிகாரி து.ரு.பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
மேலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சென்னை தாம்பரம், பல்லாவரம், பூந்தமல்லி, குன்றத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்து காவடிகள் சுமந்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் தற்காலிக மருத்துவ முகாமும் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















