மார்கழி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி கருதப்படுகிறது. 

வைகுண்ட ஏகாதசி:


தற்போது மார்கழி மாதம் நடைபெற்று வரும் நிலையில், வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ம் தேதி பிறக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். எப்போதும் சொர்க்க வாசல் திறப்பு அதிகாலையில் நிகழும். வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பக்தர்கள் பெருமாள்  கோயில் உள்ளிட்ட வைணவ தலங்களில் இரவு முழுவதும் கண்விழித்து அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பை காண்பது வழக்கம்.  


வைகுண்ட ஏகாதசி நாளை என்பதால் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாலை முதல் பக்தர்கள் பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவ தலங்களில் குவிந்து வருகின்றனர். அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. சொர்க்கவாசல் திறப்பை பார்த்தால் கோடி புண்ணியம் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். மேலும், இந்த மார்கழி மாதம் இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

கோயில்களில் குவியும் பக்தர்கள்:


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலமான திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் இன்று கிருத்திகை என்பதால் கூடுதல் சிறப்பாகவும் திகழ்கிறது. இதனால், பக்தர்கள் முருகன் கோயில்களிலும் குவிந்து வருகின்றனர். வைணவ தலங்கள் மட்டுமின்றி சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  


வைகுண்ட ஏகாதசிக்காக டோக்கன் வாங்க முயற்சித்தபோது திருப்பதியில் பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலையிலும் சொர்க்க வாசல் திறப்பை காண அதிகளவு பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.