விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கோயிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் ஏலம் போனது. குழந்தை பேறு கிடைக்கும் என்பதால் எலுமிச்சை பழத்தை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது.

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் மலைக் குன்றின் மீது மிகவும் பழமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக 5 அடி உயரத்தில் அமைந்துள்ள முருகனின் வேலை மக்கள் வணங்கி செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுத்தோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம்.

 

அதன்படி, இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற்று வந்தது. இந்த 9 நாள் திருவிழாவிலும் ஒவ்வொரு நாளும் ரத்தினவேல் முருகன் கோயிலில் இருக்கும் 5 அடி உயர வேலில் ஒவ்வொரு எலுமிச்சை பழம் சொருகி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த 9 நாள் திருவிழாக்களிலும் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட 9 எலுமிச்சை பழங்களையும் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

 

முருகனின் வேலில் சொருகி வழிபாடு நடத்தப்பட்ட எலுமிச்சை பழத்தை குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் சாப்பிட்டால் விரைவிலேயே குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் திருமண நடைப்பெறாதவர்களுக்கு விரைவில் திருமண நடைபெறும் என்றும் நம்பப்படுவதால் இந்த எலுமிச்சை பழங்களை ஏலத்தில் எடுக்க சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், பெரம்பலூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   இதனைத்தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்கு பிறகு கோயில் பூசாரி புருதோத்தமன், ஆணி பதித்த காலனியின் மீது ஏறி நின்றபடி எலுமிச்சை பழங்களை ஏலம் விடத் தொடங்கினார். 9 நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட 9 எலுமிச்சை பழங்களும் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டது.

 

ஒவ்வொரு எலுமிச்சை பழமும் 100 ரூபாய்க்கு தொடங்கி 1000, 2000, 3000 என ஏராளமானோர் போட்டி போட்டு கொண்டு ஏலம் கேட்டனர். (ஏலம் விடும் வாய்ஸ் விஷீவலில் உள்ளது) இதில் அதிகபட்சமாக முதல் நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை 50,500 ரூபாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.கொளத்தூரைச் சேர்ந்த குழந்தை பேறு இல்லாத அருள்தாஸ்-கனிமொழி தம்பதியினர் ஏலத்தில் எடுத்தனர்.

 

அதன்பின்னர், 2ஆம் நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.26,500க்கும், 3ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.42,100க்கும், 4ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.19 ஆயிரத்திற்கும், 5ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்திற்கும், 6ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.34 ஆயிரத்திற்கும், 7ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.24,500க்கும், 8ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.13,500க்கும், 9ஆம் நாள் எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்திற்கும் என மொத்தம் உள்ள 9 எலுமிச்சை பழங்களும் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.

 

விடிய, விடிய நடைபெற்ற ஏலத்தில் எலுமிச்சை பழம் எடுத்த தம்பதியினர் ஈரத்துணியுடன் வந்து கோயில் பூசாரியை வணங்கிய பிறகு ஏலம் எடுக்கப்பட்ட எலுமிச்சை பழத்துடன் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை மலைக்குன்றின் மீது அமைந்துள்ள ரத்தினவேல் முருகன் கோயில் சன்னதி முன்பு ஏலம் எடுத்த தம்பதியினர் அமர்ந்து பிரசாதத்துடன் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டு விட்டு முருகனிடம் மனமுருகி வழிபாடு நடத்தி விட்டு செல்கின்றனர்.

 

இந்த எலுமிச்சை பழத்தை முழுவதுமாக குழந்தைப் பேறு இல்லாதவர்களும், திருமணம் ஆகாதவர்களும் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவிற்குள் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விலைப் போன வினோத நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.