திருப்பாவையின் இரண்டாவது பாடல் மூலம், நோன்பின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை ஆண்டாள் எடுத்துரைத்தார். இதையடுத்து மூன்றாவது பாடல் மூலம், ஆண்டாள் கூற வருவதை காண்போம்.


பிறருக்காக தாழும் மனப்பான்மை:


பிறருக்காக தாழும் மனப்பான்மை உடையவர்களை உத்தமன் என பெரியோர்கள் அழைப்பர். பிறருக்காக தாழ்ந்து, வாமன அவதாரம் கொண்டவர் கண்ணன் என ஆண்டாள் எடுத்துரைக்கிறார். இத்தகைய பண்பு கொண்டவரும், உலகையே இரண்டு அடிகளால் அளந்தவருமான கண்ணபிரானை போற்றி பாடி நோன்பு இருந்தால், விளையும் பயன்களை எடுத்துரைக்கிறார்.


தீங்கு இல்லாத மும்மாரி மழை பொழியும். அதாவது, அதிக மழையால் பெரும் சேதம் ஏற்படாத வகையிலும், குறைவான மழையினால் வறட்சி ஏற்படாத வகையிலும் இருக்கும் என தெரிவிக்கிறார். நெற்கதிர்கள் செழித்து வளரும், நெற்கதிர்கள் ஊடே மீன்கள் துள்ளி குதித்து ஓடும் என இயற்கை வளத்தை அழகாக காட்சிப்படுத்துகிறார்.


குளம் நிறைந்து, குளத்தில் உள்ள குவளை மலரில், தேனீக்கள் வயிறு நிறைய தேன் குடித்து, மலர் இதழிலே தேனீக்கள் உறங்கும் அளவுக்கு தேன் வளம் நிறைந்து காணப்படும் என இயற்கையின் அழகை கண் முன்  கொண்டு வருகிறார்.


தாழ்வே இல்லை உயர்வு:


மேலும், அங்கு இருக்க கூடிய பெண்கள் எடுத்து செல்ல கூடிய பாத்திரங்களில் நிறைய, பசுக்கள் பால் சுரக்கும் என ஆண்டாள் கூறுகிறார். பசுக்கள், நம் வாழ்வுக்கு தேவையான பால், நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை தருவதால், பால் கறக்கிறோம் என்று கூறாமல், பசு நமக்கு கொடுக்கிறது என வள்ளல் பசுக்கள் என அழைக்கிறார். இதன்  மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பை உயர்த்தி  காண்பிக்கிறார்.


இதன் மூலம், பிறரது துன்பங்களை போக்குவதற்காக, தமது நிலையை தாழ்த்துவது, தாழ்வு இல்லை உயர்வே என்றும், அத்தகையை குணம் கொண்டவர்களை மக்கள் போற்றி வணங்குவர் என்றும் ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார். 




திருப்பாவை மூன்றாவது பாடல்:


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி,


  நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்,


தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,


   ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள


பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,


  தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி


வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்


   நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.


Also Read: Margazhi 2022: மார்கழி 2ம் நாள்..! 2வது பாடல்..! ”புற அழகை விட அக அழகே சிறந்தது” என கூறும் சூடி கொடுத்த சுடர்கொடி..


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். 


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.