ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷவாகனம், கற்பகவிருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தினத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திரமண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். 

 



 

சேர்த்தி சேவை:

 

மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இதனால் சேர்த்தி சேவையை தரிசிக்க ஏராளமான தம்பதியினர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

 

மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண