தஞ்சாவூர்: கோயிலில் பூஜை நடக்கும் தெரியும். மக்கள் கோயில்களுக்கு சென்று சுவாமிக்கு பூஜைகள் செய்து வேண்டுதலை நிறைவேற்ற வேண்டிக் கொள்வர். ஆனால் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20ம் தேதிகளில் சூரியபகவான் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்யும் கோயில் எங்கிருக்கிறது என்று தெரியுங்களா?


இருக்கு இத்தகைய பெருமை மிக்க கோயில் இருக்கும் இடம் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது மேல உளூர் கிராமம். இதன் அருகேதான் இக்கோயில் உள்ளது. கோயில் பெயர் பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 101வது சிவத்தலமாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.


தனது தோஷம் நீங்க சூரியன் வழிபட்ட தலங்களில் பரிதிநியமும் ஒன்று. ஜாதகத்தில் சூரியன் பித்ருகாரகன் என்று அறியப்படுகிறார். பித்ருகாரகனான சூரியன் இத்தல இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றதால், இத்தலம் ஒரு பித்ருதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.


1500 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையான இக்கோயிலில்தான் சூரியன் பூஜை செய்யும் நிகழ்வு நடக்கிறது. பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் குன்ம நோயினால் பாதிக்கப்பட்டு அந்நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்ட இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்று அருள்புரிகிறார். அப்புறம் என்ன சூரியனும் அதன்படி செய்ய நோய் நீங்குகிறது. இதனால்தான் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


இத்தலத்திற்கு மற்றொரு சிறப்பான வரலாறும் இருக்கு. அது என்ன தெரியுங்களா? ராமபிரானின் முன்னோர்களான சூரியகுலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டார். அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியால் இளைப்பாறினார்.


அப்போது குதிரைச்சேவகன் குதிரைக்கு உணவாக புல் சேகரிக்க முயன்றபோது அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டார். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினார் மன்னர். சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரியகுல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது. இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான் என்பதும் மிகவும் குற்பபிட வேண்டிய ஒன்றாகும். நீங்களும் இந்த தலத்திற்கு வரணுமா... அதுக்கு எப்படிங்க வழி என்கிறீர்களா?


தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ள மேலஉளூர் சென்று, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலம் இருக்கிறது. தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் சடையார்கோயில், பொன்னாப்பூர் வழியாக பரிதிநியமம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாடுக்கு நேர் வடக்கே 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இக்கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். என்னங்க புறப்பட்டு விட்டீங்களா?