தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பக்தி கோஷங்கள் முழங்க சிறப்புடன் நடந்தது. ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு மூன்று முறை மின் கம்பங்களில் தேர் அலங்காரம் சிக்கியது. அருமையாக அலங்கரிக்கப்பட்ட வந்த தேர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. 


தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். புகழ்பெற்ற பெரியநாயகி உடனுறை பெருவுடையார் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் நின்று போனது. 


கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா


ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசுப் புதிய தேர் செய்து கொடுத்ததன் மூலம் 2015ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரம் முன்பு விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், அஸ்திர தேவர் தனி, தனியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடியை பக்தர்கள் கைகளில் ஏந்தி வரிசையாக நிற்க சிவாச்சாரியர்கள் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.




பின்னர் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், 15ம் திருநாளான நேற்று காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். 


அதிர வைத்த பக்தர்களின் பக்தி கோஷம்


தொடர்ந்து, காலை 7.15 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், மாநகராட்சி ஆணையர் இரா. மகேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலை துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கவிதா, சூரியனார்கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமி தேசிகர் மற்றும்  கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது பக்திகேஷம் விண்ணை அதிர செய்தது.


திருத்தேர் ஊர்வலம்


முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் சென்றன.  பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும் மேல வீதியில், சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் தேர் நின்று சென்றன..


சாலையோரத்தில் தடுப்புகள்


தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவையொட்டி, 500க்!கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேர் மதியம் ஒரு மணியளவில் நிலையை அடைந்தது.


மூன்று முறை மின் கம்பத்தில் சிக்கிய தேர்


இந்தாண்டு தேரின் அலங்காரம் அகலப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று தேரோட்டம் ஆரம்பிக்கும் போதே ஆரம்பத்திலேயே தடங்கலுக்கு உள்ளானது. தேரின் அலங்காரப் பந்தல் வலது புறத்தில் உள்ள கடையின் பெயர் பலகையில் சிக்கியது. இதனால் தேர் அங்கிருந்து புறப்படுவதில் 20 நிமிடம் கால தாமதம் ஆனது. பின்னர் சிக்கிய தேர் அலங்காரம் அகற்றப்பட்ட பின்னர் நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோயில் அருகே சென்றபோது, வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் மீண்டும் சிக்கியது.


மீண்டும், மீண்டும் மின்கம்பத்தில் சிக்கியது


தொடர்ந்து இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்டது. இதையடுத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு தேர் மீண்டும் புறப்பட்;டது. ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் மீண்டும் சிக்கியதால் தேர் நின்றது. மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதால், அலங்காரப் பந்தலின் அகலம் குறைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மின் கம்பியில் சிக்கியிருந்த தேரின் அலங்காரத்தை அறுத்து எடுக்கும் போது மணிகண்டன் மற்றும் வெங்கடேஷ் என்ற 2 மின்வாரிய ஊழியர் பீ;ங்கானால் ஆன மின்சாதன பொருள் விழுந்ததால் காயமடைந்தனர்.