தை அமாவாசை (Thai Amavasai) தினம் நாளை வரும் நிலையில், இந்த நாளில் முன்னோர்களுக்கு எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது பற்றி காணலாம். 


தை அமாவாசை:


ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை வரும் நிலையில், இந்த நாளானது முன்னோர்களை வழிபட சிறந்த நாளாக கருதப்படுகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாத அமாவாசையிலும் முன்னோர்களை வழிபட முடியாதவர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசையை தவற விடக்கூடாது. இதில் தை மாதம் அமாவாசையானது பூலோகத்தில் வந்த முன்னோர்கள் பித்ரு லோகத்திற்கு திரும்புவதாக ஐதீகமாகும். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து நீத்தார் வழிபாடு எனப்படும் தர்ப்பணம் செய்தால் அவர்கள் தங்கள் சந்ததிகளுக்கு நல்லாசிகள் வழங்குவார்கள் என்பது ஐதீகமாகும். 


தர்ப்பணம் எப்போது தர வேண்டும்?


அந்த வகையில் தை அமாவாசையானது இந்தாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வருகிறது. வெள்ளிக்கிழமை வரும் இந்த அமாவாசை காலை 8.05 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது. இந்த திதி  பிப்ரவரி நாளை தொடங்கும் நிலையில் காலையிலேயே நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. குறிப்பாக காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தர்ப்பணம் செய்ய சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது. 


எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பண வழிபாடு செய்பவர்கள் வீட்டில் முன்னோர்கள் புகைப்படம் முன்பு இலை போட்டு படையலிட்டு சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் பசுமாட்டுக்கு கீரை, இயலாதவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல தானங்கள் செய்யலாம். தை அமாவாசை விரதத்தை தாய், தந்தை இல்லாத ஆண்கள் மற்றும் கணவர் இல்லாத பெண்கள் ஆகியோர் மேற்கொள்ளலாம். ஆறு, கடல் போன்ற ஓடும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வது சிறந்ததாகும். 


என்ன செய்ய வேண்டும்?


தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளிப்பதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்நாளில் மாமிசம், வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. அதேபோல் தர்ப்பணம் செய்யும் எள்ளை மற்றவர்களிடம் கடனாக பெறக்கூடாது. சூரியன் இருக்கும் கிழக்கு திசையை பார்த்தபடி தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முடிந்தவரை தை அமாவாசை நாளில் கோயிலுக்கு சென்றும் வழிபடலாம்.