ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் நான்கு உத்திர வீதிகளில் வலம் வருகிறார். தைத்தேரோட்ட திருவிழாவின் 4-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தார். அங்கிருந்து 5.15 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 12 மணிக்கு வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டம் சென்றடைந்தார். அந்த மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திர வீதிகளில் வலம் வந்து, இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மேலும் திருவிழாவின் 5-ம் நாளான இன்று காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்தார்.இதனை தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலையில் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். வருகிற பிப்ரவரி 1-ந் தேதி நெல் அளவை கண்டருளுகிறார். 2-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணி வரை ரதரோஹணம் (துனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4-ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்