ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன. மேலும், 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உங்களவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில் ஆகும். இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடங்கி ஒவ்வொரு நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமான் மூலசானத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். குறிப்பாக அம்ச வாகனம், யாழி வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், தங்கக்குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.




இந்த தைத்தேர் உற்சவத்தின் முக்கிய நாளான தைத்தேர் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.


நாளை 25ம் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 26ம் தேதி மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 4 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.