கீழடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மிதுன லக்கனத்தில், மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக கோலகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மரங்களுக்கு திருமணம் நடைபெற்றது.
கீழடியில் அர்ச்சுன லிங்கேஷ்வரர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், உலக நன்மை வேண்டி மரங்களுக்கு திருமணம் நடத்தும் சிறப்பு நிகழ்வு பக்திபூர்வமாக நடைபெற்றது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, கீழடியில் தங்கியிருந்ததாக கருதப்படுகிறது. அப்போது அவர்கள் வழிபட்ட சிவன், இங்குள்ள அர்ச்சுன லிங்கேஷ்வரர் என அழைக்கப்படுகிறார்.
பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது
இந்த அடிப்படையில், சிவனின் வடிவமான அரச மரத்திற்கும், சக்தியின் வடிவமான வேம்பு மரத்திற்கும் திருமணம் நடத்தப்பட்டது. அரச மரத்திற்கு சேலை அணிவிக்கப்பட்டு, வேம்பு மரத்துக்கும் புதிய ஆடைகள் அணிவிக்கப்பட்டன. இரண்டு மரங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. கணேச பட்டர் அரச மரம் சார்பாகவும், மலையப்ப பட்டர் வேம்பு மரம் சார்பாகவும் காப்பு கட்டி, மாலை மாற்றினர். முக்கியமான திருமண நிகழ்வு நடைபெற்றது. வேம்பு மரத்திற்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. பின்னர் பெண்கள் திருமாங்கல்யக் கயிறுகளை புதிதாக மாற்றி ஆனந்தமுடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கீழடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது.