கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சேலம் குரங்குச்சாவடி ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

Continues below advertisement

கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சேலம் குரங்குச்சாவடி ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Continues below advertisement

அதன்படி, சேலம் குரங்குச்சாவடியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து குருசாமிகள் மூலம் துளசி மாலை அணிந்து கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதத்தை தொடங்கினர். குறிப்பாக, கன்னிசாமிகளும் அதிக அளவில் மாலை அணிந்து கொண்டனர். அப்போது, பக்தர்கள் எழுப்பிய “சாமியே சரணம் ஐயப்பா” என்ற சரண கோஷம் கோயில் வளாகம் முழுவதும் எதிரொலித்தது. தொடர்ந்து ஐயப்பனை தரிசனம் செய்த பக்தர்கள், சபரிமலை யாத்திரைக்கான விரதத்தை பக்தி பரவசத்துடன் தொடங்கினர்.

தங்க கவசத்தில் அருள்பாலித்த ராஜகணபதி

மேலும், கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி தங்க கவசத்தில் அருள்பாலித்த ராஜகணபதியை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான கடைவீதி ராஜகணபதி திருக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளன்று மூலவர் ராஜகணபதிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ராஜகணபதியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து, குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் செல்வச் செழிப்பு வேண்டி வழிபட்டனர்.