பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

Continues below advertisement




சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்ட முதல் நாள் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். உலகப்புகழ்பெற்ற இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என  ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம்.


அதேபோல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி இடவம் மாதத்துக்காக (வைகாசி) இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.


தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி நடைதிறக்க உள்ளார். மங்கல இசை முழங்க கோயில் நடை திறக்கப்பட்டு, ஆழிக்குண்டத்தில் அக்னி ஏற்றப்படும். பின்னர், ஐயப்பன் விக்கிரகத்தில் உள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து பூஜை எதுவுமின்றி நடை சாத்தப்படும்.




தொடர்ந்து, நாளை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு வரும் 19-ம் தேதி வரை தொடர் வழிபாடுகள் நடைபெற உள்ளன. வரும் 19-ல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதாக இருந்தது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அந்நாட்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது.


இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் சபரிமலைக்கு வர உள்ளதாக தெரிகிறது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, "குடியரசுத் தலைவர் வர உள்ளதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்நாட்களில் பக்தர்களுக்கான தரிசனம் இருக்காது" என்றனர்.