கோவை நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் பணிக்கான பாலக்கால் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பூஜை செய்து திருப்பணியை தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பிரதான பெரிய தேரின் மரக்கட்டைகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் உறுதித்தன்மை குறைந்திருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பையும், கோவிலின் பாரம்பரியச் சிறப்பையும் கருத்தில் கொண்டு, உலகத் தரம் வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய பிரம்மாண்ட திருத்தேரை அமைக்க இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.1.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் திட்டமிடப்பட்டன.

Continues below advertisement

அதன்படி, கோவில் வளாக மைதானத்தில் இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க பாலக்கால் பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு, புதிய தேருக்கான மரக்காலில் புனித நீர் ஊற்றி திருப்பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பி. அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் விமலா, மண்டல உதவி ஆணையர் உஷா நந்தினி, பேரூர் கோவில் உதவி ஆணையர் சத்யவதி, திருத்தேர் ஸ்தபதிகள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய திருத்தேர் பணிகள் இன்று முதல் தீவிரமாக நடைபெற உள்ள நிலையில், அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத் தேரோட்டம் புதிய கம்பீரமான திருத்தேரில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது.