ஒவ்வொரு மாநில மக்களுக்கும் ஒவ்வொரு பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பொங்கல் பண்டிகை எப்படி மிக மிக முக்கியமானதோ, மலையாள மொழி பேசும் மக்களுக்கும், கேரளாவினருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஓணம் பண்டிகை ஆகும்.


ஓணம் பண்டிகை:


வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி மன்னனை அழித்ததும், அந்த மகாபலி மன்னன் வருடத்திற்கு ஒருநாளான ஆவணி திருவோண தினத்தில் தனது மக்களை பார்க்க வருவதுமே ஓணம் பண்டிகை ஆகும்.


ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். அதாவது, மலையாளத்தில் சிம்ம மாதமான இந்த மாதத்தில் வரும் 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை என 10 நாட்கள் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை நாள் வரும் 29-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.


முதல் நாள் – அத்தம்


2வது நாள் – சித்திரா


3வது நாள்  - சுவாதி


4வது நாள் – விசாகம்


5வது நாள் – அனுஷம்


6வது நாள் – திருக்கேட்டை


7வது நாள் – மூலம்


8வது நாள் – பூராடம்


9வது நாள் – உத்திராடம்


10வது நாள் – திருவோணம்


சிறப்புகள் என்ன?


ராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் பெயர்களையே அத்தத்தில் தொடங்கி திருவோணம் வரை இந்த 10 நாட்களுக்கு சூட்டியுள்ளனர்.


முதல் நாள்:


முதல் நாளான அத்தத்தில் மகாபலி மன்னன் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்புவதை குறிப்பிடுகிறது. இந்த நாளில் வாமனமூர்த்தி திருக்கோயில் மற்றும் கொச்சியில் பிரம்மாண்ட ஊர்வலம் நடக்கிறது.


2வது நாள்:


சித்திரா எனப்படும் 2வது நாளில் கேரளா மட்டுமின்றி உலகெங்கிலும் வசிக்கும் மலையாளிகள் அன்றைய தினத்தில் கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


3வது நாள்:


சுவாதி தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை அளித்து மக்கள் மகிழ்வார்கள். நான்காவது நாளான விசாகத்தில் அறுசுவைகளை வீடுகளில் தயார் செய்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.


4வது நாள்:


மலையாளிகள் 4-ஆம் நாளான விசாகத்தில் அறுவடையில் கிடைக்கப்பெற்ற புதிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சமைத்து அறுசுவயைான உணவை உண்கின்றனர். இது அறுவடை தினத்தை குறிக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் உணவே ஓண சத்யா எனப்படுகிறது.


5வது நாள்:


5-வது நாளான அனுஷ தினத்தில் கேரளாவின் புகழ்பெற்ற படகுப்போட்டி பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும்.


6வது நாள்:


6-வது நாளான திருக்கேட்டையில் தங்களது மூதாதையர்களிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள். மேலும், கோயிலுக்கும் சென்று வழிபடுவார்கள்.


7வது நாள்:


7-வது நாளான மூலத்தில் கொச்சின் முழுவதும் உள்ள கோயில்களில் ஓண சத்யா வழங்கத் தொடங்கப்படும். மேலும், கேரளாவின் பல பகுதிகளிலும் புலிகளி, கைகொட்டுக்களி போன்ற கேரள கிராமப்புற கலைகள் அரங்கேற்றப்படும்.


8வது நாள்:


8-வது நாளான பூராடத்தில் வீட்டின் முன்பு போடப்படும் பெரிய கோலத்தின் நடுவில் மகாபலி மற்றும் வாமனர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.இதன்மூலம் மகாபலி ஒவ்வொரு வீட்டிற்கும் வருவதை குறிக்கிறது.


9வது நாள்:


9வது நாளான உத்திராடத்தில் கேரளாவில் உள்ள பக்தர்கள் அனைவரும் மகாபலி வருகையை சிறப்பிக்க அறுவடையில் கிடைத்த புதிய காய்கறிகளையும், புதிய பழங்களை பயன்படுத்தி பல்வேறு உணவுகளை தயாரிக்கின்றனர்.


10வது நாள்:


ஓணம் பண்டிகை கொண்டாடும் ஒவ்வொரு நாளும் வண்ண பூக்களால் வாசல்களில் அலங்கரித்து வைத்திருப்பார்கள். விழாவின் முக்கிய நாள் மற்றும் நிறைவு நாளான 10-வது நாளில் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு கோலமிடுகின்றனர். ஓணசத்யா எனப்படும் ஓண விருந்து சிறப்பாக தயாரிக்கப்பட்டு வழிபாட்டிற்கு பிறகு உண்டு மகிழ்கின்றனர். 10-வது நாள் தும்பை, காசி, சங்குப்பூ என பல வகை பூக்களால் வீட்டு வாசல்கள் கண்களை கவரும் வகையில் இருக்கும். தமிழ்நாட்டில் வாழும் கேரள சகோதரர்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.