நாகூர் தர்காவின் 467ம் ஆண்டு கந்தூரி விழா; ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

மயக்க நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப் பக்தர்கள் கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில் சுற்றியிருந்த பக்தர்கள் அவரை தொட்டு வணங்கினர்.

Continues below advertisement
உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 
நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 14,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகையிலிருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு நாகூர் வந்தடைந்து கொடி ஏற்றப்படுவது வழக்கம் இப்படி கொடி ஊர்வலம் புறப்படும் இடத்தில் கடந்த 13ம் தேதி வான வேடிக்கை மத்தாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை நாகுரை சேர்ந்த சர்வ மதத்தினரும் கண்டு களித்தனர்.

 
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது. ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது  அதிகாலை 5 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளில் ஒருவரான பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். நிகழ்வில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
தொடர்ந்து மயக்க நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப் பக்தர்கள் கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில் சுற்றியிருந்த பக்தர்கள் அவரை தொட்டு வணங்கினர். பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்வில் பங்கேற்க ஆட்டோவில் வந்து இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
கந்தூரி விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களும் சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர். அவர்களின் வசதிக்காக சுகாதார மற்றும் குடிநீர் ஏற்பாடுகள் தர்கா மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் கண்காணிப்பு கேமரா, உயர் கோபுரங்கள், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola