கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலயத்தில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் புகழ்பெற்ற சுந்தரகுஜாம்பிகை உடனுறை அருள்மிகு அட்சயலிங்க சுவாமி, (அஞ்சுவட்டத்தம்மன் ஆலயம்) அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பங்குனி பெருவிழா கடந்த ஏப்ரல் 20ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



 

இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றியுள்ள 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது (தெற்கு வீதியில் வலம் வந்து கொண்டிருக்கிறது). மேளதாளங்கள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை என பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.