நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை பெரிய கோயில் என அழைக்கப்படும் மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது. யானையின் கால்களில் வெள்ளி கொலுசுகள் அணிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த சிறப்பு நிகழ்வு பக்தர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆலயத்திற்கு வந்த அபயாம்பிகை
மயிலாடுதுறை காமராஜர் சாலைக்கு அருகில் உள்ள ஸ்ரீ விஸ்வநாதபுரம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாவின் முக்கிய அங்கமாக, மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை வரவழைக்கப்பட்டது. யானை ஆலயத்திற்கு வந்ததும், கைலாய வாத்தியங்கள் முழங்கவும், பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு செய்தனர். இந்த அரிய காட்சியை காண அப்பகுதி மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.
வெள்ளி கொலுசு அணிவித்து மரியாதை
கோயிலுக்கு வந்த அபயாம்பிகைக்கு முதலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தின் முன் யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. யானைக்கு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் மாலை அணிவித்து பக்தர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் உச்சமாக, அபயாம்பிகையின் இரண்டு முன்னங்கால்களிலும் பக்தர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெள்ளி கொலுசுகள் அணிவிக்கப்பட்டன. பொதுவாக, யானைகளுக்கு கொலுசு அணிவிக்கும் வழக்கம் அரிது என்பதால், இந்த நிகழ்வு பக்தர்களுக்கு ஒரு தெய்வீக அனுபவமாக அமைந்தது.
பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
வெள்ளி கொலுசு அணிவிக்கப்பட்ட பின்னர், யானை அபயாம்பிகைக்கு வாழைப்பழம், சர்க்கரை பொங்கல், கரும்பு, தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் யானைக்குத் தீபாராதனை காட்டி வழிபட்டனர். அப்போது, அங்கிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பக்திப் பரவசத்தில் மூழ்கினர். தனது துதிக்கையால் புனித நீரை முகர்ந்து, அங்கிருந்த பக்தர்கள் மீது தீர்த்தமாகத் தெளித்தது அபயாம்பிகை. இந்தச் செயலைப் பார்த்து சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் வரிசையில் நின்று யானையிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
வீடு வீடாகச் சென்று அருளாசி
கோயிலில் பூஜை முடிந்த பிறகு, அபயாம்பிகை மயிலாடுதுறை நகர வீதிகளில் வலம் வந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்ற யானைக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மரியாதை செய்தனர். அபயாம்பிகையை வரவேற்று, அதற்கு, வாழைப்பழம், வெல்லம் போன்றவற்றை வழங்கினர். யானை அனைவருக்கும் ஆசீர்வாதம் செய்தது. பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பாரம்பரிய நிகழ்வு, விநாயகர் சதுர்த்தியன்று மக்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தது.
மயிலாடுதுறையின் கலாச்சார மற்றும் ஆன்மீக அடையாளமாகத் திகழும் மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற முக்கிய நாட்களில் நகர மக்களுடன் இணைந்து விழாக்களில் பங்கேற்று வருகிறது. இந்த வருடம், விநாயகர் சதுர்த்தி அன்று யானைக்கு வெள்ளி கொலுசு அணிவிக்கப்பட்டது, இந்த விழாவை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியது. இந்த நிகழ்வு, மக்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையேயான பிணைப்பையும், மரியாதையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.