பிரசித்தி பெற்ற சிவாலயம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.
மூன்று தீர்த்த குளங்கள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு மற்றும் குறிப்பிட்ட சில அமாவாசை அன்று தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
பித்துருக்கள் உலகத்தின் தலைவர்
இதில் சந்திர தீர்த்தக்குளம் அருகே பித்துருக்கள் உலகத்தின் தலைவர் என போற்றப்படும் ருத்ரனின் பாதம் அமைந்துள்ளது. இந்த ருத்ர பாதத்தில் பித்ருக்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து சந்திர தீர்த்த குளத்தில் நீராடி வழிபாடு செய்தால் 21 ஜென்ம பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் இன்று ஆடி அம்மாவாசையை முன்னிட்டு ருத்ரபாதம் மண்டபத்தில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுக்க வருகை புரிந்தனர். தொடர்ந்து மண்டபத்தை சுற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தும் பலி கர்ம பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். பின்னர் கோயிலில் சுவாமி, அம்பாளை வழிபட்டு செல்கின்றனர்.
ஆடி அமாவாசையின் சிறப்பு
ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும். இந்நாளில் பித்ருக்களுக்கு (மறைந்த முன்னோர்கள்) எள்ளும், தண்ணீரும் இட்டு தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் நம்பிக்கையாகும். பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் மிகவும் பிடித்தமானவை என்பதால், அமாவாசை நாளில் அவர்களை நினைத்து பித்ரு ப்ரீதி (முன்னோர்களை மகிழ்வித்தல்) செய்வது வழக்கமாக உள்ளது. ஆகையால் இந்த சிறப்பு மிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் புண்ணியத் தலங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் கடற்கரைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் வழங்க மக்கள் பெருமளவில் கூடுவார்கள்.
ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளின் மகத்துவம்
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, தை மாதத்தில் வரும் அமாவாசை, மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை ஆகியவை மிகவும் விசேஷமான நாட்களாகக் கருதப்படுகின்றன. இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் ஆறு, குளம் மற்றும் கடலில் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, அருகில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதன் காரணமாக, தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் புண்ணிய நதிக்கரைகளில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கும் நிகழ்வுகள் பக்திப்பூர்வமாக நடைபெறுகின்றன.