மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் புகழ்பெற்ற காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில், ஆஷாட நவராத்திரி விழாவின் மிக முக்கிய நிகழ்வான பஞ்சமி திதியை முன்னிட்டு, அருள்மிகு வெற்றி வராகி அம்மனுக்கு மகா யாகமும், அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட மகிஷாரூட அலங்கார வழிபாடும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. இதில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.

Continues below advertisement

ஆஷாட நவராத்திரியின் ஆன்மீகப் பின்னணி

இந்து மத வழிபாட்டில் ஓராண்டில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவை புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி, தை மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி, பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி மற்றும் ஆனி-ஆடி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி ஆகும். இதில் ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி தனிச்சிறப்பு வாய்ந்தது.

அன்னை பராசக்தியின் பெரும் படைத்தளபதியாகவும், தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் விளங்கும் ஸ்ரீ வராகி அம்மனுக்கு உகந்த வழிபாட்டு காலமாக இது போற்றப்படுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கவும், எடுத்த காரியங்களில் வெற்றி பெறவும் வராகி அம்மனை இந்நாட்களில் வழிபடுவது விசேஷமாகும்.

Continues below advertisement

வெற்றி வராகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்

மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வெற்றி வராகி அம்மனுக்கு, கடந்த 14ஆம் தேதி காப்புக்கட்டுடன் ஆஷாட நவராத்திரி விழா வெகுவிமரிசையாகத் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நாளான பஞ்சமி திதியான இன்று அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.

காலை 8.00 மணியளவில், உலக நன்ம வேண்டியும், பக்தர்கள் தங்களின் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற வேண்டியும் பிரம்மாண்டமான மகா யாகம் தொடங்கப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் பல்வேறு நறுமணப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தின் முன்பு கலசங்கள் வைக்கப்பட்டு, புனித நீர் ஆவாகனம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

16 வகையான மகா அபிஷேகம்

யாகத்தின் பூர்ணாஹுதிக்குப் பின்னர், தியாக குண்டத்தில் வைத்து முறைப்படி பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கருவறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதன்பின், வெற்றி வராகி அம்மனுக்கு மகா அபிஷேகம் விமரிசையாகத் தொடங்கியது.

அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தூய மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் பல்வேறு நறுமணத் திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகங்கள் வரிசையாகச் செய்யப்பட்டன. இறுதியாக, யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அன்னைக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் "ஓம் சக்தி, ஜகதம்பே, வராகி தாயே" என பக்தி கோஷங்களை எழுப்பினர்.

கண்கொள்ளாக் காட்சியாக 'மகிஷாரூட அலங்காரம்'

அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அன்னை வெற்றி வராகி அம்மனுக்குத் திரை இடப்பட்டு, கருவறையில் மகா அலங்காரப் பணிகள் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டன. ஆஷாட நவராத்திரியின் பஞ்சமி திதி நாளான இன்று, அன்னை வராகி தேவி மகிஷ வாகனத்தின் (எருமை கடா) மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் 'மகிஷாரூட அலங்காரம்' செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பச்சை பட்டு உடுத்தி, தங்கக் கவசங்கள் மற்றும் வண்ணமயமான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் ஆயுதங்கள் ஏந்தி அன்னை காட்சியளித்த விதம் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. சோடச உபசார தீபாராதனைகளுடன், தூப தீபங்கள் காட்டப்பட்டு, கற்பூர ஆராதனை நடைபெற்ற போது ஒட்டுமொத்த ஆலயமும் ஆன்மீக ஒளியில் பிரகாசித்தது.

திரண்ட ஆன்மீகப் பெருங்கடல்

இந்த அரிய மகிஷாரூட அலங்கார தரிசனத்தைக் காண்பதற்காக மயிலாடுதுறை மட்டுமின்றி, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில் திரண்டனர்.

வழிபாட்டில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் ஆலயத்தின் சார்பில் மஞ்சள், குங்குமப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் மற்றும் மயிலாடுதுறை ஆன்மீக அமைப்பினர் இணைந்து செய்திருந்தனர்.