திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் திருக்கல்யாண உற்சவம் - கோயில் திரண்ட திரளான பக்தர்கள்
பிரசித்தி பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தரங்கம்பாடி அருகே உள்ள உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது.
மயிலாடுதுறையில் பயங்கரம்... மருத்துவமனையில் பெண் நோயாளியை கடுமையாக தாக்கிய 2 ஆண்கள்

மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றி சிவபெருமான்
புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் பல சிறப்புகள்
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

சித்திரை திருவிழா
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 14 நாட்கள் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு சித்திரை திருவிழா கடந்த 1 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மாங்கல்ய தாரணம்
இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் வசந்தமண்டபத்திற்கு ஊஞ்சல் மணமேடையில் எழுந்தருளினர். சீர்வரிசை எடுத்து வந்து வேதியர்கள் மந்திரம் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர் ஊஞ்சலில் சுவாமியும் அம்பாளும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது.
























