மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவை அடுத்த ஆக்கூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், 16 அடி நீள அலகு குத்தியும், தீக்குழியில் இறங்கியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Continues below advertisement

வரம் அருளும் ஆக்கூர் மாரியம்மன்

ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் போற்றப்படுகிறார். திருமணத் தடையால் அவதிப்படுபவர்களுக்கு நல்வாழ்வு அமைத்துத் தருபவளாகவும், மழலைச் செல்வம் வேண்டி வருவோருக்குக் குழந்தை வரம் நல்குபவளாகவும் அன்னை விளங்குகிறாள். இதனால், இப்பகுதி மக்கள் அம்மனைத் தங்கள் குலதெய்வமாகவே பாவித்து, ஆண்டுதோறும் இவ்விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா

நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ஆம் தேதி மங்கள இசை மற்றும் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Continues below advertisement

வீராவேசத்துடன் நடைபெற்ற காவடி ஊர்வலம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவையொட்டி, ஆக்கூர் இரட்டைக் குளக்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றது. கரகத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், பால்காவடி, பறவைக்காவடி, அலகு காவடி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கை முழங்க ஊர்வலமாக வந்தனர். குறிப்பாக, ஒரு பக்தர் தனது வாயில் 16 அடி நீள அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்த காட்சி பக்தர்களிடையே பெரும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது. ஆக்கூர் கடைவீதி வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், கோவிலை வந்தடைந்தது.

தகிக்கும் தீக்குழியில் மலர் பாதம் பதித்த பக்தர்கள்

கோயில் முன்பாக பிரம்மாண்டமான முறையில் தீக்குழி (அக்னி குண்டம்) வளர்க்கப்பட்டிருந்தது. பூசாரி வேத மந்திரங்கள் ஓத, முதலில் சக்தி கரகம் தீக்குழியில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து, மஞ்சள் ஆடை உடுத்தி காப்புக் கட்டி விரதமிருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் "ஓம் சக்தி, பராசக்தி" என்ற கோஷங்களுடன் வரிசையில் நின்றனர்.

தகிக்கும் கனல் என்று கூடப் பாராமல், தரையில் நடந்து செல்வது போன்ற மிக இயல்பான நிலையில் பக்தர்கள் தீக்குழியில் இறங்கித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பல பக்தர்கள் கைகளில் குழந்தைகளை ஏந்தியபடியும் தீமிதித்தது பக்திப் பெருக்கை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செம்பனார்கோவில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவசரத் தேவைகளுக்காகத் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்திருந்தனர்.

இதில் ஆக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். "அன்னையின் அருளால் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா இவ்வாண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்தது," என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.விழா ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.