பக்தர்களுக்கு உதவிய ‘பாகபலி’ ஞானாம்பிகை! தருமபுர தேரோட்டத்தில் நடந்த அற்புதம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!
தருமபுரம் ஆதீன வைகாசிப் பெருவிழா திருத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை: ஆன்மீகமும் சைவத் தமிழும் தழைத்தோங்கும் புகழ்பெற்ற மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், வைகாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தின் போது, தருமபுரம் கோயில் யானை ‘ஞானாம்பிகை’ தேரை பின்புறம் இருந்து தனது தலையால் முட்டித் தள்ளி இயக்கிய அபூர்வக் காட்சி, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பக்திப் பரவசத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருமபுர ஆதீனம்
மயிலாடுதுறை நகரின் அருகே அமைந்துள்ள தருமபுரத்தில், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமைவாய்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதிலும், தமிழ் வளர்ப்பதிலும் இந்த ஆதீனம் உலகளவில் புகழ்பெற்றதாகும். இந்த மடத்தின் வளாகத்தினுள்ளே சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஆன்மீகச் சிறப்பு மிக்க ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசிப் பெருவிழா கடந்த மே மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கியது. தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, கடந்த நேற்றிரவு இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் தெய்வீகத் திருமணமான ‘திருக்கல்யாண உற்சவம்’ பக்தி மார்க்கத்துடன் நடைபெற்றது.
மங்கள வாத்தியங்கள் முழங்கத் தொடங்கிய தேரோட்டம்
வைகாசிப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று காலை அதிவிமரிசையாகத் தொடங்கியது. அதிகாலையிலேயே ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், சுவாமியும் அம்பாளும் வண்ண மயமான மலர்களாலும், நவரத்தின ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மங்கள வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளினர்.
அங்கு கூடியிருந்த ஓதுவா மூர்த்திகள் பன்னிரு திருமுறைகளைப் பாடினர். தொடர்ந்து, வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்கள் மற்றும் மகா தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் முறைப்படி தொடங்கியது. இதில் திரண்டிருந்த திரளான பக்தர்கள், "நமச்சிவாய", "தென்னாடுடைய சிவனே போற்றி" ஆகிய பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, பக்திப் பெருக்குடன் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் மக்கள் சின்னங்களான குதிரைகள், ஆடு, யானைகள் அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் நாதஸ்வரக் குழுவினர் பக்தி முழக்கமிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 5 பிரம்மாண்டமான திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பரவசப்படுத்திய ‘ஞானாம்பிகை’ யானையின் அற்புதம்
இந்த தேரோட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, பாரம்பரிய முறைப்படி மூன்று கம்பீரமான யானைகள், குதிரைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆடு ஆகியவை அணிவகுத்து முன்னே சென்றன. தருமபுர ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளிலும் தேர் அசைந்தாடி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
தேர் நகர்ந்து சென்று மேற்கு ரத வீதியின் வளைவில் திரும்பிய போது, அதன் பிரம்மாண்டப் பளு காரணமாகத் திரும்புவதில் சிறு சுணக்கம் ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த பக்தர்களுக்கு உதவும் வகையில், தருமபுரம் ஆலயத்தின் யானையான ‘ஞானாம்பிகை’ முன்வந்தது. பாகனின் சைகையை ஏற்று, தனது பலமிக்க நெற்றியால் தேரின் பின்புறப் பகுதியை முட்டி, மெதுவாக முன்னோக்கித் தள்ளியது.
பக்தர்களின் நெகிழ்ச்சி
மனித சக்தியோடு, தெய்விகப் பணியில் விலங்கினமும் கரம் கோர்த்த இந்த அற்புதக் காட்சியைக் கண்ட ஆன்மீக அன்பர்கள் மெய்சிலிர்த்துப் போயினர். யானை தேரைத் தள்ளிய உடனே, பக்தர்கள் உற்சாகத்துடன் வடத்தைப் பிடித்து இழுக்க, தேர் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நகர்ந்தது. இந்த அரிய காட்சி அங்கிருந்தவர்களை பெருத்த பரவசத்தில் ஆழ்த்தியது.
மடாதிபதி தரிசனம்
தருமபுர ஆதீனத்தின் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இந்தத் திருத்தேரோட்ட நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்றார். அவர் தேரின் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்ததோடு, ரத வீதிகளில் உலா வந்த சுவாமியையும் அம்பாளையும் பக்தி சிரத்தையுடன் தரிசனம் செய்தார். ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள்
பத்து நாட்கள் நடைபெறும் இந்த வைகாசிப் பெருவிழா இத்துடன் நிறைவடைவதில்லை. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, நாளை காலை, முந்தைய ஆதீன மடாதிபதிகளின் ஜீவ சமாதிகளாக விளங்கும் குருமூர்த்தங்களுக்கு’ தற்போதைய மடாதிபதி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நாளை மறுதினம் ஆன்மீக உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் புகழ்பெற்ற ‘பட்டணப் பிரவேசம்’ மற்றும் அதன் முக்கிய நிகழ்வான ‘சிவிகை பல்லக்கு’ உற்சவமும் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் தருமபுர ஆதீன நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























