செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 5 தலைமுறையாக, பழமை மாறாமல் நடத்தி வரும் மார்கழி பஜனை. பஜனை குழுவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த வெளிநாட்டு பயணிகள்

Continues below advertisement

நவநீதகிருஷ்ணன் கோயில்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் மேற்கு ராஜ வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயிலாகும். இந்த ஆலயத்தில் குடிகொண்ட கிருஷ்ணர் பல்லவர் காலத்தில் அங்குள்ள மலை பாறைக்குன்றில் வெண்ணையை உருட்டி, திரட்டி வைத்ததாகவும், அதுவே பிற்காலத்தில் வெண்ணை உருண்டை கல் என அழைக்கப்பட்டு, தற்போது பார்வையாளர்களுக்கு அவை காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

கிருஷ்ணரின் மறு உறுவமாக இந்த வெண்ணை உருண்டை கல்லை பக்தர்கள் பார்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் திருமங்கை ஆழ்வார் இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணரை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள், இதிகாசங்கள் கூறுகின்றன. இப்படி பழமை வாய்ந்த இந்த நவநீதகிருஷ்ணன் கோயிலில் 5 தலைமுறையை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் சந்ததியினரின் பாரம்பரியம் வழக்கம் தடைபடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் மார்கழி பஜனை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

ஆண்டாள், திருப்பாவை பாடல்கள்

மார்கழி முதல் தேதியிலிருந்து 30 நாட்கள் வரை இந்த பஜனை நடைபெறம். இன்று அதிகாலை 6 மணிக்கு, மிருதங்கம் இசைக்க, வெண்கல தள இசையுடன் புறப்பட்ட மார்கழி பஜனை குழுவினர் முக்கிய வீதிகள் வழியாக சென்று தலசயன பெருமாள் கோயில் மண்டபம், கிருஷ்ணரதம், கணேசரதம், வெண்ணை உருண்டை கல் ஆகிய இடங்களில் நின்று ஆண்டாள், திருப்பாவை பாடல்கள் பாடினர்.

அப்போது சுமங்கலி பெண்கள், பக்தர்கள் பஜனை குழுவினர் கொண்டு வரும் அனையா விளக்கில் பூக்கள், காணிக்கையாக சில்லரை காசுகளை போட்டு வணங்கினர். கணேச ரதம் அருகில் மார்கழி பஜனை வந்தவுடன் வெளிநாட்டினர் சிலர் அங்கு பஜனையில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்ட அவர்கள், ஆண்டாள், திருப்பாவை பாடல்களின் தாள இசைக்கு கைதட்டி, கும்மியடித்து ரசித்தனர்.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் ஒரு தலைமுறையோடு மார்கழி பஜனைகள் காணாமல் போய்விட்டன. இதில் மாமல்லபுரத்தில் இன்றளவும் தொன்றுதொட்டு பழமைமாறாமல் 5 தலைமுறையாக மார்கழி பஜனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களும், சிறுவர்களும் ஆர்வமாக இந்த பஜனையில் பங்கேற்றதை காண முடிந்தது.