மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கோலம் தான். மார்கழி கோலம் பற்றி அறிய நிறைய விஷயங்கள் விஷேங்கள் உள்ளன.


அதிகாலையில் ஏன் கோலம் போடுகிறோம்?


மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓஸோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓஸோன் நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர்.


நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.


மார்கழி மாத கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர், விளக்கேற்றுகின்றனர். மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு, நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள்.  






புராண பின்னணியும் இருக்கிறது:


மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது. அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது. தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் அக்காலத்தில் இவ்வழக்கம் கையாளப்பட்டது. 



மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்.பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன.