மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த  அறுபத்துமூவர் பேட்டை கிராமத்தில் அமர்நாத் பனி லிங்கம் போன்று  6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  அறுபத்து மூவர் பேட்டையில் அமைந்துள்ள சப்த மாதா ஆலய வளாகத்தில் இந்த ஆண்டு பனிலிங்கம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மலர்மாலைகள் மற்றும் தாமரை மணி மாலை ஆகியவை லிங்கத்துக்கு சாற்றப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. 




பின்னர், பனி லிங்கத்திற்கு  மகா தீபாராதனை நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 11 ஆண்டுகளாக மயிலாடுதுறையில் சிவராத்திரியன்று பனிலிங்கம் வைக்கப்பட்டு பூஜை செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பனி லிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.


ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ கிருபாலநாதர் சுவாமி திருக்கோயிலில் 175 ஆம் ஆண்டு சிவராத்திரி விழா; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ கிருபாலநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது.  இக்கோவிலில் 175 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. 




புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தினை சிவாசாரியார்கள் தலையில் சுமந்து பக்தர்கள் புடைசூழ புறப்பாடு செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் வரப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீ கிருபாலநாதர் சுவாமிக்கு புனித நீர் கொண்ட கலசத்தினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. "ஈசனுடன் ஒரு இரவு" என்று சுவாமிக்கு முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால மற்றும் நான்காம் கால சிறப்பு புனித நீர் அடங்கிய கலச அபிஷேகங்கள் விடியற்காலை வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கார்கோடநாதர் சுவாமிக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


முற்காலத்தில் சப்த நாகங்களில் ஒன்றான ராஜநாகமாக கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இந்த தலம் கார்கோடகன்குடி என்று அழைக்கப்பட்டு தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது ராகு-கேது பரிகாரத்தலமான இக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.




முட்டம் ஸ்ரீ மஹாபலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் முட்டம் கிராமத்தில் ஸ்ரீமஹாபலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. மூன்றடி நிலம் கேட்டு விண்ணையும், மண்ணையும் பாதத்தால் அளந்த மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். ஐஸ்வர்யங்களை இழந்த மகாபலி சக்கரவர்த்தி பின்னர் முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத சுயம்பு மஹாபலீஸ்வரர் கோயிலில் சிவவழிபாடு செய்து இழந்த செல்வங்களை மீட்டதாக புராண வரலாறு கூறுகிறது. 




ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த இந்த கோயில் சிதிலமடைந்து தற்போது ஒரு கீற்றுக்கொட்டகையில் வழிபாடு நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியையொட்டி இக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவியங்கள் கொண்டு 4 கால சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இரவு 8 மணிக்கு முதல் கால அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணி, 3 மணி, 5 மணி என நான்கு கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.