காஞ்சிபுரம்: கோவிந்தா கோவிந்தா"என பக்தர்களின் பக்தி பரவச கோஷங்களிடையே கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது. ட்ரோன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் மீது தெளிக்கப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இராஜகோபால சுவாமி திருக்கோயில்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம், மணிமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் உள்ளது. முதலாம் நரசிம்ம பல்லவன், சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும், இராமாநுஜர் மற்றும் அநேக ஆச்சார்யர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை வாய்ந்த திருத்தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.
மகாபாரத காலத்தில் கிருஷ்ணபரமாத்மா பாஞ்சசன்யம் எனும் சங்கினை வலது கரத்தில் ஏந்தி எதிரிகளை நடுங்கச்செய்தார். பாண்டவர்களின் வேண்டுகோளுக்கிரங்கி அதே கோலத்தில் வலது கரத்தில் சங்கினை ஏந்தி காட்சியளிப்பது இத்திருக்கோயிலுக்கே உரிய சிறப்பு என நம்பப்படுகிறது. குன்றத்தூர் பகுதியில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றாகவும் இந்த கோவில் இருந்து வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் செய்யும்பொருட்டு கடந்த நான்கு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. செவ்வாயன்று மாலையில் நடைபெற்ற 6 ஆம் கால யாகபூஜையில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, திருப்பெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம் விழா
இன்று காலையில் கோ பூஜை, விஸ்வரூபம், திருவாராதனம், யாகசாலை ஆராதனம், நித்ய ஹோமம், மஹாபூர்ணாஹூதி, யாத்ராதானம், தச தானம் நடைபெற்ற பின்னர்,மேளத் தாளங்கள் முழங்க, மங்கள இசை இசைக்க பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி,"கோவிந்தா கோவிந்தா"என பக்தர்களின் பக்தி பரவச கோஷங்களிடையே மூலவர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு,மகா தீபாராதனைகள் காட்டப்பட்டு கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின் ஸ்ரீ செங்கமலவல்லி சமேத ஸ்ரீ இராஜகோபால சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்கோயில் வளாத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீரானது தெளிக்கப்பட்டது.
சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன், ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் இரா.ஐயப்பன், திருக்கோயில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார், காவல் உதவி ஆணையர் சுந்தர், ஆய்வர் சிவராமகிஷ்ணன், அறங்காவலர் எஸ்.சம்பத்குமார், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், மணிமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்களும், அருட்பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மேலும் மணிமங்கலம் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரியும் கிராம மக்களும் செய்திருந்தனர்.
