கள்ளழகர் சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்.
சித்திரைத் திருவிழா 2026 கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின் சிகரநிகழ்வாக நாளை அதிகாலை கள்ளழகர் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகையாற்று பகுதியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும் பகுதியில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் நான்கு புறங்களிலும் மூன்றடுக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வைகையாற்று ஏவி மேம்பாலத்தின் கீழ் பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் தகர தகடுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
நெற்கதிர்களாலும் அலங்கரிக்கப்படுகிறது. கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில் உள்ள லாலா சத்திரம் மண்டகப்படி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை மண்டகப்படிகளை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக அழகர்கோவில் பகுதியில் இருந்து நெற்கதிர்களும், பெருமாளுக்கு உகந்த விருச்சி பூக்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மதுரை மல்லிகை, செண்பகம், மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து, பெங்களூரு ரோஸ், ஜர்புரா, தாஜ்மஹால் ரோஜ், கிஷாந்தம், சாங்க் ஆப் இன்டியா மற்றும் தாமரைப்பூ, துளசி, அருகம்புல் உள்ளிட்ட பூக்களை பயன்படுத்தி அலங்கரிக்கப்படவுள்ளது. செல்வம் செழிக்க வேண்டி செல்வமாலை ( காசு மாலையும், விவசாயம் செழிக்க கரும்பு, நெற்கதிர்களாலும் அலங்கரிக்கப்படுகிறது.
காலணிகளை வீசினால் கைது நடவடிக்கை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பகுதியில் வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு, லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. வர்ணம் பூசப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் வரக்கூடிய பக்தர்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட உள்ளனர். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வைகை ஆற்றிற்கு சிறிதளவு தண்ணீர் வந்தடைந்துள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது காலணிகளை வீசினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது பிரஷர் பம்புகளை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உயர்நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை தல்லாகுளம், கோரிப்பாளையம் ஆழ்வார்புரம், வைகையாற்று பகுதி என வழிநெடுகிலும் பொதுமக்கள், பக்தர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாநகர காவல் துறை மூலமாக 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ ஐ உதவியுடன் முன் வழக்குகள் உள்ள குற்றவாளிகளை கண்டறியும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுகள் முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட சீருடை அணியாத காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதிகளில் வைகையாற்றில் நெல்பேட்டை மற்றும் ஆழ்வார்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக மட்டும் பக்தர்கள் ஆற்றிற்குள் இறங்கி கள்ளழகரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் ட்ரோன் கேமரா மூலமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் வருகைக்கான தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்தல்குடி கால்வாய் வழியாக கழிவுநீர் கலந்த தண்ணீர் வைகை ஆற்றுக்குள் ஓடுவதால் துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பள்ளி விடுமுறை, கோடை விடுமுறை, உள்ளூர் விடுமுறை காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 3000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை அதிகாலை 5.35 மணி தொடங்கி 5.55 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளவுள்ளார். இதனிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டை அடித்துக் கொள்ளும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
