மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் - விண்ணதிர முழங்கிய விதவிதமான கயிலாய வாத்தியங்கள் - வித விதமான சங்குகளை முழங்கி சாமி தரிசனம் செய்த சிவ பக்தர்கள்.

சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி ; மீனாட்சி- சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்
 
உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக காலை தொடங்கியது. கீழமாசி வீதி தேர்முட்டி பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் பிரியாவுடனையுடன் எழுந்தருளிய பெரிய தேரும், அதன் பின் மீனாட்சியம்மன் பச்சைபட்டுடுத்தி எழுந்தருளிய தேரும் ஒன்றன் பின் ஒன்றாக வடம்பிடித்து இழுத்து புறப்பாடாகியது. சுவாமி - அம்மன் எழுந்தருளிய தேர் புறப்பட்டபோது தேரின் முன்பாக கயிலாய வாத்தியங்களான கொம்புத்தாரை, கொக்கறை, சேமக்கலம், சங்கு, நகரா,உடுக்கை,பிரம்மதாளம், தப்பு போன்ற இசைக்கருவிகளை இசைத்தபடி சிவ பக்தர்கள் சென்றனர்.
 
தேரினை வடம்பிடித்து இழுக்கும் இளைஞர்கள்
 
மேலும் ருத்ராட்சையால் ஆன சிவலிங்கங்களை தோள்களில் சுமந்தபடியும், கயிலாய வாத்தியமான உடுக்கையை அடித்தபடி ஏராளமான பெண் சிவ பக்தர்கள் தொடர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் சோர்வின்றி தொடர்ந்து இசைத்தபடி சென்றனர். ஏராளமான குழுந்தைகள், சிறுவர்கள் சிவபெருமான், மீனாட்சியம்மன், கருப்பசாமி வேடமிட்டபடி திருத்தேரின் முன்பாக ஊர்வலமாக சென்றனர். திருத்தேரின் முன்பாக சாம்பிராணி புகை இட்டபடி ஏராளமான சிவ பக்தர்கள் சென்றனர். தேரினை வடம்பிடித்து இழுக்கும் இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் பெண்கள், சிறுவர்கள் ருத்ராட்ச மாலைகளை அணிந்தடி சிவ நடனத்துடன் உற்சாகமாக கயிலாய வாத்தியங்களை இசைத்தபடி தேரின் முன்பாக சென்றனர்.