மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றுகொண்டிருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சித்திரைத் திருவிழா

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும்  மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (45) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதன் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.

கடுமையான நெரிசல் ஏற்பட்டது

இந்நிலையில் அவரது உடலை  பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலயே  உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கள்ளழகரை சாமி தரிசனம் செய்வதற்காக மண்டகப்படிக்கு வந்த நபர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவிற்கான முக்கிய பிரமுகர்களை அனுமதித்த நிலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் கூட சாமி தரிசனம் செய்ய முடியாத சூழல் உருவானது. மேலும் மண்டகப்படியை சுற்றி கள்ளழகர் மூன்று முறை வலம் வருவதற்கு கூட நீண்ட நேரம் தாமதமானது பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான எந்தவித பாதைகளும் இன்றி அடைக்கப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்கள் அதிக அளவிற்கு மண்டக படிப்பகுதியில் அனுமதிக்கப்பட்டதால் யாரும் தரிசனம் செய்ய முடியாத சூழல் உருவானது.

தீர்த்தவாரி நிகழ்ச்சி

ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து மதிச்சயம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தோப்பரை பைகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். முன்னதாக கள்ளழகர் முன்பாக வரும் கள்ளழகர் கோயில் மற்றும் விசிறிகளுக்கு பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமாக வரவேற்றனர். தீர்த்தவாரியின்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக  பிரஷர் பம்புகளை பயன்படுத்தி சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மதிச்சியம் ராமராயர் மண்டபத்திற்கு பிரஷர் பம்புகளுடன் வந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டதோடு, பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் தோப்பரையை பயன்படுத்தி மட்டுமே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.
 
கட்டுப்பாடு
 
தடையை மீறி பிரஷர் பாம்புகளை பயன்படுத்தி தீர்த்தவாரியில் ஈடுபட்டால் பிரஷர் பம்புகள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை மீறி பிரஷர் பம்புகளை பயன்படுத்தியவர்களிடம் பிரஷர் பம்புகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.