குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று இரவு சூரசம்காரம் நடைபெற உள்ள நிலையில் கோவிலில் வேடமணிந்து குவிந்து வரும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், கோவில் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு அவதாரக்கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். தசரா திருவிழாவின் சிகர நிகழ்சியான மஹிசா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் குழுக்களாகவும் வீடு வீடாகச்சென்று பெற்ற காணிக்கைகளை கோவில் முன்புள்ள உண்டியலில் செலுத்தி விட்டு குடும்பத்தோடு அம்மனை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் இன்று காலை முதலே கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கிடையில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 250 சிசிடிவி கேமராக்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் 4000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பகுதி முழுவதும் பக்தர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.