மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ ஓம் சக்தி மகா காளியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து மறுநாள் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து 2 -ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று  மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. 




பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க இரண்டு கோயில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




சீர்காழி அருகே எருக்கூர்   நர்த்தன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நர்த்தன விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குடமுழுக்கு செய்திட அப்பகுதி மக்கள் முடிவெடுத்து திருப்பணிகளை மேற்கொண்டனர். திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது.




தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு இரண்டாம் காலயாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.  பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து, பின்னர் மூலவர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்  செய்தனர்.




குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பத்தர்கள் புனித நீராடல்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஓளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஓளி வழங்க முடியாமல்போனது. இதனையடுத்து சூரியபகவான் குத்தாலம் வந்து  தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றதாக ஐதீகம்.




கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம். இதன் சிகர நிகழ்வான கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையன்று  ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், ஸ்ரீமன்மதீஸ்வரர், ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் ஆகிய ஆலயங்களில் இருந்து சாமி மற்றும் அம்மன் மங்கள வாதியங்கள் ஒலிக்க வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில்வாகனம், வெள்ளி மூஷிக வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் மங்கள வாதியங்கள் ஒலிக்க வீதிஉலாவாக காவிரி கரைக்கு வீதிஉலாவாக காவிரி கரைக்கு எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர் ‌