கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாட்டில் இருந்து, ஐயப்பனுக்கு கோயிலுக்கு விரதம் இருந்து, இருமுடி கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். 


வாகனங்களில் செல்லும் பக்தர்கள்


இதற்காக கார்த்திகை மாதம் முதல் மாலை அணிந்து விரதம் இருந்து, பல்வேறு குழுக்களாக சபரிமலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் குழுவாக சபரிமலைக்கு செல்வதால், கார் ,வேன்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்கின்றனர்.


இந்த ஆண்டும் வழக்கம் போல சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாட்டில் இருந்து படையெடுக்கின்றனர். தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றன. இதேபோன்று கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரம் கணக்கான வாகனங்கள் சபரிமலைக்கு செல்கின்றன.


அலங்கார வாகனங்கள்


சபரிமலை கோயிலுக்கு செல்லும் தனியார் வாகனங்களில், ஒரு சிலர் அதை அலங்கரித்துக் கொண்டு செல்கின்றனர். வாழைமரம் கட்டுவது, வாகனங்களை கோயில் வடிவில் அலங்கரித்துக் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. இது போன்று வாகனங்களில் அலங்காரம் செய்து, சபரிமலைக்கு வரக்கூடாது என கேரள மாநில மோட்டார் போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு வாகனங்கள் வருவதால், இந்த வாகனத்தை பார்க்கும் போது பிற வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல்கள் ஏற்படுவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்று அலங்காரம் செய்த வாகனங்கள் வரக்கூடாது என எச்சரித்துள்ளனர். 


அதிகாரிகள் எச்சரிக்கை 


மேலும் கோயிலுக்கு வரும் வாகனங்களில் கண்கவர் விளக்குகளை எரிய விட்டு வரக்கூடாது எனவும், பேருந்துக்குள் அதிக ஒலி எழுப்பும் பாடல்களை இசைத்து வரக்கூடாது என பல்வேறு கட்டுப்படுதல் விதிக்கப்பட்டுள்ளது. வாழைமரம் மற்றும் இளநீர் ஆகியவை பேருந்து முன் பகுதியில் கட்டப்பட்டு அலங்கரித்து வருவது, வனவிலங்குகளின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதால் அவ்வாறு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விதவிதமான அலங்காரங்கள் செய்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 5000 ரூபாய் வரை ஒரு சில வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது கட்டுப்பாட்டுடன் வர வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.