உயர்நீதிமன்ற கிளை தடை நீக்கியதை அடுத்து நெரூர் சித்தர் சதாசிவ பிரம்மேந்திராள் கோயிலில், எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும்  வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.


 


 




கரூரை அடுத்த நெரூர் அருகே பக்தர்கள் எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்வது நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த நிகழ்ச்சிக்கு தடை போட்டிருந்தது. இதனை எதிர்த்து அப்பகுதி பக்தர் நவீன்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


 




அங்கப் பிரதட்சணம் செய்வது அவரவர் சுய விருப்பம். ஆன்மீக செயலுக்கு இது போன்று தடை விதிக்கக்கூடாது தடையை உடனடியாக விளக்க வேண்டும். மீண்டும் அப்பகுதியில் அங்கப் பிரதட்சணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இதனை அடுத்து  மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தடையை நீக்கி அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி அளித்ததை அடுத்து, மீண்டும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கரூர் மாவட்டத்தில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


 


 




நெரூர் கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு முக்தியடைந்த சித்தர் சதாசிவ பிரம்மேந்திராள் கோயிலும், சிவன் கோயிலும் உள்ளன. சதாசிவ பிரம்மேந்திராளின் 110 வது ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி  நடந்தது. இதில் முக்கிய நிகழ்வான எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் நிகழ்ச்சி, நடைபெற்றது. காலையில் சதாசிவ பிரம்மேந்திராளுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து நகர்வலம் வந்து நெரூர் அக்ரஹாரத்தில் சிறப்பு பூஜையும் நடைபெற்றன.


 




 


பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் ஏதேனும் ஒரு இலையில் சாப்பிட்டதாக ஐதீகம். பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் சாப்பிட்ட இலைகளில் ஆண்கள், பெண்கள் என்று சுமார் 50 பேர் நேர்த்திக் கடனுக்காக உருண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கரூர், திருச்சி, சென்னை, கோவை, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்கள் வேண்டிய காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது ஐதீகம்.