கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஊர்வலமாக கம்பம் கொண்டுவரப்பட்டு மாரியம்மன் ஆலயத்தில் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.   இதை ஒட்டி மூன்று கொம்புகள் கொண்ட வேப்பமரம் பாரம்பரியமான முறையில் வெட்டி எடுக்கப்பட்டு காலையில் பாலம்மாள் புரம் பகுதியில் இருந்து மாரியம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், அமராவதி ஆற்றிற்கு இரவு கொண்டு சென்று கம்பத்திற்கு வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக  கருப்பாயி கோயில் தெரு வழியாக ஜவஹர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக  மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று பின்னர் கம்பம் கோவில் உள்பிரகாரத்தில் நடப்பட்டது. 

வழி நெடுகிலும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கம்பத்தினை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் வைக்கப்பட்ட கம்பத்திற்கு கரூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.