தமிழ் கடவுள் என்று பக்தர்களால் அன்புடன் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்க மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக சஷ்டி திகழ்கிறது. மாதந்தோறும் சஷ்டி கொண்டாடப்பட்டாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டியே மகாகந்தசஷ்டியாக கொண்டாடப்படுகிறது.


சூரசம்ஹாரம்:


ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகான சஷ்டியில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தது இந்த கந்த சஷ்டி திருவிழாவிலே ஆகும். முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் நடந்த யுத்தத்தின் இறுதியில் முருகன் கடலுக்குள் மரமாக மறைந்து ஒளிந்து கொண்ட சூரபத்மனை தனது வேலினால் அழித்ததாகவும், பிளவுபட்ட மரத்தின் ஒரு பாதி சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறியதாகவும் புராணங்கள் கூறுகிறது. அந்த மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியிலும் முருகன் ஏந்திக் கொண்டதாகவும் கந்தபுராணம் கூறுகிறது.


முருகன் சூரபத்மனை வதம் செய்த இந்த நிகழ்வை சூரசம்ஹாரமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது முதலே முருகன் கோயில் களைகட்டி காணப்பட்டது.


லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்:


இந்த நிலையில், கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதையடுத்து காலை முதல் முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரையில் இன்று மாலையில் நடக்கும் சூரசம்ஹாரத்தை காண சுமார் 6 லட்சம் மக்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதையடுத்து, திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளும், ஏராளமான கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட அறுபடை முருகன் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


சிறப்பு ஏற்பாடுகள்:


சென்னையிலும் புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் அதிகளவு பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா உள்பட வெளிநாடுகளில் உள்ள முருகன் கோயிலிலும் இன்று சூரசம்ஹாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


முருகன் சூரசம்ஹாரத்திற்கு பிறகு தனது சினத்தை தணித்துக் கொண்ட இடம் திருத்தணி என்பதால் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடத்தப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.