காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின், இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவ ஆலயங்களில் ஒன்றாக வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. முனிவர்கள் மற்றும் தேவர்கள் இடையே வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்து குறித்து சந்தேகம் எழத் துவங்கியது. இதன் காரணமாக இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்பட துவங்கியது.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேஸ்வரர் கோயில்
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். வழிபாடு செய்தபொழுது நேரில் தோன்றிய இறைவன் அவர்களுடைய வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவில் இருக்கும் சிவபெருமானுக்கு, "வழக்கறுத்தீஸ்வரர்" என பெயர் பெற்றது.
இக்கோயிலில் சத்தியம் செய்ய சொல்வார்கள், இக்கோயிலில் பொய் சத்தியம் செய்தால் அவர்களுடைய குடும்பம் விருத்தி ஆகாது என்பது நம்பிக்கை. இதனால் இக்கோயிலில் பொய் சத்தியம் செய்ய தவறு செய்தவர்கள் பயந்து உண்மையை கூறி விடுவார்கள்.
பிரம்மோற்சவ திருவிழா
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உற்சவம் , ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் இன்று நந்தி திருவுருவம் பொருந்திய கொடியை ஏற்றி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி காலை, இரவு என, தினமும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார்.
எந்தெந்த தேதியில் என்னென்ன உற்சவம் ?
ஜூலை மாதம் எட்டாம் தேதி - காலை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். மாலை வேளையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி - காலை பூத வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். மாலை வேளையில் ராவணேஸ்வரர் வாகனத்தில் காட்சியளிக்கிறார்
ஜூலை மாதம் பத்தாம் தேதி - காலை நாக வாகனத்திலும், மாலை வேளையில் ரிஷப வாகனத்திலும் சாமி காட்சியளிக்கிறார்.
ஜூலை மாதம் 11ஆம் தேதி - காலை அதிகார நந்தி வாகனமும், மாலை வேளையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
ஜூலை மாதம் 12ஆம் தேதி - காலை உற்சவம் கிடையாது. மாலை வேளையில் யானை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.
ஜூலை மாதம் 13ஆம் தேதி - மகா ரதம் திருதேரோட்டம் நடைபெறுகிறது.
ஜூலை மாதம் 14ஆம் தேதி - மாலை வேளையில் குதிரை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.
ஜூலை மாதம் 15 ஆம் தேதி - காலை வேளையில் திருப்பல்லாக்கும் மற்றும் மாலை வேளையில் கற்பக விருச்சகம் காமதேனு வாகனத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார்.
ஜூலை மாதம் 16ஆம் தேதி - நடராஜர் புறப்பாடு காலை நடைபெறுகிறது. மாலை வேளையில் ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சளிக்கிறார்.
ஜூலை மாதம் 17ஆம் தேதி - காலை கேடயம், தொடர்ந்து மாலை வேளையில் நூதன கண்ணாடி விமானம் வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.
ஜூலை மாதம் 17ஆம் தேதி - மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் இரவு உற்சவம் நடைபெறுகிறது. ஜூலை மாதம் 19ஆம் தேதி - தீர்த்தவாரி நடைபெறுகிறது