நூறாண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் ஸ்ரீ பொன்னேரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்க விமர்சையாக நடைபெற்றது.
பொன்னேரி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ( ponneri amman temple kanchipuram )
கோவில்கள் நிறைந்த நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் பொன்னேரி ஏரி கரை அருகே நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பொன்னேரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நவரத்தினங்களில் முத்துவாகவும், உலோகங்களில் வெள்ளியாகவும், நட்சத்திரங்களில் உத்திரமாகவும், கிழமைகளில் திங்களாகவும், விளங்கி ஸ்ரீபொன்னேரி அம்மன் அருள் பாலித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவிலில் மிக முக்கிய அம்மன் கோவிலாக பொன்னேரி அம்மன் விளங்கி வருகிறார். ஏராளமான மக்களுக்கு பொன்னேரி அம்மன் குலதெய்வம் ஆகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய பெருமையும் பழமையும் உடைய பொன்னேரி அம்மன் ஆலயத்தை உபயதாரர்கள், நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு கோவில் கோபுரங்கள், சன்னதிகள் உள்ளிட்டவை அனைத்தும் புணர அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலை அமைத்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஒலிக்க, கோவில் கோபுரம் கலசங்கள் மற்றும் சன்னதிகளில் புனித நீர் தெளித்து, ஸ்ரீபொன்னேரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மகாகும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.