காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி  நடைபெற்றது. 28.300 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி, 25 லட்சத்து 10 ஆயிரத்து 718 ரூபாய் ரொக்க பணம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்டிருந்தது.





 

காஞ்சிபுரம் : கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள  கந்தபுராணம் அரகேற்றிய திருக்கோவிலான குமரகோட்டம் முருகன் கோவிலில்  ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்று வருகின்றனர். அவ்வாறு  கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகன் கோவிலில் மூலவர், உற்சவர் உள்ளிட்ட சன்னதிகளில்  வைக்கப்பட்டுள்ள கோவில் உண்டியலில்  பணம், நகை, வெள்ளி பொருட்கள் முதலியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.



 

மூன்று மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்களை என்னும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை என்னும் பணியில் கோவில் அலுவலர்களுடன், கல்லூரி மாணவ, மாணவியர்கள்  சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும் ஈடுபட்டனர்.



 

அதன்படி பக்தர்கள் காணிக்கையாக 25 லட்சத்து 10 ஆயிரத்து 718 ரூபாய் ரொக்க பணமும் 28 கிராம் 300 மில்லி, தங்க நகைகளும், 800 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக பெறப்பட்டிருந்தது. இந்த பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.



 



தல வரலாறு

 

மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.

 

பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.

 

தல விளக்கம்

 

குமரகோட்ட தல விளக்கத்தில் அறிவது, முருகப்பெருமானார் தாருகன் முதலாம் அசுரரை அழித்துத் தேவரை வாழ்வித்தபின் திருக்கயிலையில் அம்மை அப்பரை வணங்கி அருள்விளையாடல்களைப் புரிந்துகொண்டிருந்தனர். பிரமன் தேவர் குழாங்களுடன் சிவபிரானை வணங்கச் செல்லும்பொழுதும் மீளும் பொழுதும் முருகப் பெருமானை மதியாது சென்றனன். அவனது அகந்தையை நீக்கக் கருதிய கருணையொடும் குமரப்பிரானார் வேதனை அடைந்து ஒருவாறு வணங்கிய வேதனை ‘வேதம் வல்லையோ’ என வினவினர். ஓம் மொழிப் பொருளின் உண்மைகாணாது மயங்கிய பிரமனைக் குட்டிச் சிறையி லிட்டுப் பிரம கோலத்துடன் படைத்தற்றொழிலை மேற்கொண்டனர் தேவசேனாதிபதி.