காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், (kanchipuram kumarakottam temple) வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நகரேஷு காஞ்சி என போற்றப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலிலுக்கும் இடையில் சோமாஸ் கந்தர் மூர்த்த கோட்டமாக குமரக்கோட்டம் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோவிலில் பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டு, பதில் தெரியாமல் விழித்த பிரம்மனை சிறையில் இட்டு தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டு கையில் கமண்டலம், ருத்ராட்ச மாலையுடன் பிரம்மாவின் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி அளித்து வருகிறார். முருகப்பெருமானின் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாக திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
மேளதாளங்கள் முழங்க
அதன்படி சோபகிருது வருடம் வைகாசி மாதத்தை முன்னிட்டு வைகாசி விசாக திருவிழா உற்சவத்தை ஒட்டி திருக்கொடியேற்ற உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேலும் மயிலும் வரைந்த திருக்கொடிக்கு மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் திருகொடியை ஏற்றி வைத்தனர், பின்னர் கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.
வைகாசி விசாக பெருவிழா
வைகாசி விசாக திருவிழா கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்ற உற்சவத்தை கண்டு விட்டு முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றனர். வைகாசி விசாக பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி நாள்தோறும் காலை மாலை என இரு வேலைகளிலும் ஆடு,புலி அன்னம், மயில்,நாகம், பூதம்,குதிரை, சந்திர பிரபை,சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.