"காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு உழவாரப் பணியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புதர் நிறைந்த குளத்தை தூய்மைப்படுத்திய தன்னார்வலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன"
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அதற்கான கோயில் திருப்பணிகள் அனைத்தும் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இதன் காரணமாக, ஊழியர்கள் இரவு - பகல் பாராமல் தொடர்ந்து கோயில் புனரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், தேசிய இந்துக்கள் திருக்கோயில்கள் பவுண்டேஷன் சார்பில் இன்று ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணிகள் நடைபெற்றன. இந்தத் தன்னார்வப் பணியில், 350-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
கோவில் தூய்மை பணி
இந்தப் பணியின்போது, ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு வெளியே பல வருடங்களாகப் பராமரிப்பில்லாமல் புதர்கள் மண்டி காணப்பட்ட மங்கள திருத்தம் குளம் இன்று காலையில் இருந்து தன்னார்வலர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. மேலும், கோயிலின் வெளிப் பிரகாரம், உள் பிரகாரம், கோயில் தூண்கள் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள சாமி சிலைகள் ஆகியவற்றை அவர்கள் தூய்மைப்படுத்தினர்.
இதேபோன்று, கோயிலின் கொடிமரத்தையும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்தினர். அத்துடன், உற்சவங்களுக்குப் பயன்படுத்தப்படும் உற்சவ வாகனங்களையும் சுத்தப்படுத்தினர்.
குறிப்பாக, கோயில் உள்பகுதியில் இருந்த 108 சிவன் சிலைகளும் தூய்மைப்படுத்தப்பட்டன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த உழவாரப் பணியில், ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கோயில் புனரமைப்பிற்குத் தங்களது பங்களிப்பை அளித்தது குறிப்பிடத்தக்கது.
தலைகீழாக மாறிய குளம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வெளியே உள்ள, பராமரிப்பில்லாமல் இருந்து வந்தது. இந்த தன்னார்வல்களுக்கு இணைந்து ஒரே நாளில் தூய்மைப்படுத்தினர். இது தொடர்பாக குளம் முன்பு இருந்த புகைப்படம், இப்பொழுது இருக்கும் புகைப்படம் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.