கோயில் நகரம் காஞ்சிபுரம் ( Temple City Kanchipuram )
காஞ்சிபுரம் கோயில் நகர மாவட்டத்தில் இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் வருடத்தில் 300 நாட்களுக்கு மேல் திருவிழா நடக்கும் நகரமாகவும் காஞ்சிபுரம் உள்ளது. 1700 ஆண்டுகளுக்கு முன்பு கூட பல சமயங்கள் சார்பாக நூற்றுக்கணக்கான திருவிழாக்கள் நடைபெற்று வந்தது. அந்த வகையில் பாரம்பரிய நகரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில், பிரதான கோயிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ( Kanchipuram Varadharaja Perumal Temple) உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வருடம் முழுவதும் 200 நாட்களுக்கு குறையாமல் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற " வைகாசி பிரம்மோற்சவ விழா " நடைபெற உள்ளது.
வைகாசி பிரம்மோற்சவ விழா ( Vaikasi Brahmotsavam 2024 )
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பல உற்சவங்கள் நடைபெற்றாலும் வைகாசி பிரம்மோற்சவ விழா முக்கிய விழாவாக கருதப்படுகிறது. பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும். இந்த விழாவில் கருட சேவை, தேர் உற்சவம், தீர்த்தவாரி ஆகியவை முக்கிய விழாவாக கருதப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் இந்த திருவிழாவை காண காஞ்சிபுரம் வருகை புரிவார்கள். பத்து நாட்களும் காஞ்சிபுரம் விழா கோலம் பூண்டு காட்சி அளிக்கும். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பந்தல்கால் நடப்பட்டு திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா எப்பொழுது நடைபெறுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
திருவிழாக்கள் நடைபெறும் தேதி- உற்சவம் என்னென்ன ?
மே மாதம் இருபதாம் தேதி ( 20- 05-2024 ) : அதிகாலை 2:30 மணியிலிருந்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தங்கச் சப்பரம் வாகனத்தில் காலை சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மே மாதம் 21ஆம் தேதி ( 21- 05-2024 ) : அன்னப்பறவை வாகனத்தில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில், சூரிய பிரபை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மே மாதம் 22 ஆம் தேதி ( 22- 05-2024 ) : திருவிழாவிற்கு மிக முக்கிய உற்சவம் மாத இருக்கக்கூடிய கருட சேவை ( kanchipuram varadharaja perumal temple garuda sevai ) மற்றும் கோபுர தரிசனம் உற்சவம் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு அத்திகிரி மலையில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது, தொடர்ந்து கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு உற்சவம் அனுமந்த வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார்.
மே மாதம் 23ஆம் தேதி ( 23- 05-2024 ) : நாக வாகனத்தில் ஸ்ரீ பரமநாதர் திருக்கோளத்தில் , காலை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து மாலை சந்திர பிரபை வாகனத்தில் திருவீதி உலா தரிசனம் தருகிறார். தொடர்ந்து நெல் அளவை நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெறுகிறது.
மே மாதம் 24 ஆம் தேதி ( 24- 05-2024 ) : தங்க பல்லாக்கு உற்சவம் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை வேலையில் யாளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.
மே மாதம் 25ஆம் தேதி ( 25- 05-2024 ) : ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோளத்தில் தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். இதனை தொடர்ந்து சொர்ண அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை வேலையில் யானை வாகனத்தில், வீதி உலா மற்றும் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது.
மே மாதம் 26ஆம் தேதி ( 26- 05-2024 ) : விழாவின் பிரதான திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. காலை 2 மணி அளவில் உற்சவர் புறப்பாடும், தொடர்ந்து திருத்தியரை சுவாமி எழுந்தருதல் நிகழ்ச்சியும், இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை உற்சவம் கிடையாது.
மே மாதம் 27ஆம் தேதி ( 27- 05-2024 ) : பகல் 2:30 மணி அளவில் தொட்டி திருமஞ்சனம் மற்றும் மாலை 6 மணி அளவில் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.அன்றைய தினம் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மே மாதம் 28ஆம் தேதி ( 28- 05-2024 ) : ஆள்மேல் பல்லாக்கு ( மட்டை அடி உற்சவம் ) தொடர்ந்து, காலை 10 மணி அளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.