தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றின் மேற்கு கரையில் உப்புக்கோட்டை கிராமமும், கிழக்கு கரையில் உப்பார்பட்டி கிராமமும் அமைந்துள்ளது. இதில், உப்புக்கோட்டையில் வரதராஜபெருமாள் கோவிலும், உப்பார்பட்டியில் சுந்தரராஜபெருமாள் கோவிலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறும். அப்போது சித்ராபெளர்ணமி அன்று 2 பெருமாளும் கள்ளழகர் வேடமிட்டு ஒரே நேரத்தில் எதிர்சேவை கொண்டு முல்லைப்பெரியாற்றில் இறங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா 2 கோவில்களிலும் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை முல்லைப்பெரியாற்றில் 2 பெருமாளும் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி உப்புக்கோட்டை வரதராஜபெருமாளும், உப்பார்பட்டி சுந்தரராஜபெருமாளும் நேற்று முன்தினம் இரவு கள்ளழகர் வேடமிட்டு வீதிஉலா வந்தனர். அப்போது சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நேற்று காலை 2 பெருமாளும் கள்ளழகர் வேடத்தில் குதிரை வாகனத்தில் முல்லைப்பெரியாற்றில் எழுந்தருளினர். பின்னர் 2 பெருமாளும் ஒரேநேரத்தில் எதிர்சேவை கொண்டு ஆற்றில் இறங்கினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் போடி கொட்டக்குடி ஆற்றில், போடி சீனிவாசபெருமாள் கள்ளழகர் வேடத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சீனிவாசபெருமாள் கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளினார். பின்னர் கோவிலில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் வெண்பட்டு அணிந்து கொட்டக்குடி ஆற்றுக்கு புறப்பட்டார். அதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் பக்தர்கள் சிலர் தீப்பந்தம் ஏந்தியும், சாட்டையடித்தும் வழிபாடு செய்தனர். மேலும் பலர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் அவல், சர்க்கரை, கல்கண்டு போன்ற பிரசாதங்கள் வைத்து வழிபட்டனர். கள்ளழகர் புறப்பாட்டின்போது போடியின் பாரம்பரிய கலைகளான தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. இதில், குறிப்பாக பக்தர் ஒருவர் அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறியபடி சென்றார். இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதேபோல் பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று வராகநதியில் பெருமாள் கள்ளழகராக இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து நேற்று காலை பெருமாள் கள்ளழகராக பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். அப்போது பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில் மண்டகப்படிதாரர்கள் ஏற்பாடு செய்த 30 இடங்களுக்கு சுவாமி கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வழிநெடுக பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷம் எழுப்பி கள்ளழகரை வழிபட்டனர்.
பின்னர் வடகரை உழவர் சந்தை எதிரே உள்ள வராகநதியில் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோவிலில் 16 அடி நீளமுள்ள அகத்திய முனிவர் கை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கைக்கு பால், தயிர், குங்குமம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சித்ரா பவுர்ணமி, சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்