தசரா  நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம்.நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாள்கள் அன்னையை துர்கை வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன.




தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.




இதில் கடந்த மே மாதம் உலகம் முழுவதும் பேசப்பட்ட தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்திய சிவிகைப்பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, எடுபிடி உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டுவரும் தொன்மைவாய்ந்த பொருட்களுக்கும், பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட சோடஷ உபசார தீபாராதனை உள்ளிட்ட 16 விதமான ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகளை தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மேற்கொண்டார். இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.




நவராத்திரியை முன்னிட்டு தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள அஷ்ட தசபுஜ துர்கா மகாலட்சுமி ஆலயத்தில் நடைபெற்று வரும் சதசண்டியாகத்தில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, மற்றும் மல்லாரி இசை கச்சேரி, மடாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு!


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன சைவ மடத்தில் பழமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதியில் பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜதுர்க்கா மகாலெஷ்மி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 72 -ம் ஆண்டு சதசண்டி யாகம் கடந்த 26 -ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக எட்டாம் நாளான நேற்று சதசண்டி யாகம் நடைபெற்றது.




தொடர்ந்து யாகத்தில், புனித கடங்கள் வைக்கப்பட்டு நவசண்டி யாகம் நவக்கிரக யாகம் உள்ளிட்டவை நடைபெற்று பூர்ணாகுதி நடைபெற்றது. மஹாதீபாரானை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்பட்டன, நிறைவாக அம்பாளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. எட்டாம் நாளான நேற்று நான்கு நாதஸ்வரங்கள் நான்கு மேளத்துடன் மல்லாரி இசை கச்சேரி நடைபெற்றது.




எட்டாம் நாளில் வாசிக்க கூடிய ராகமான ஹரிகாம்போதி ராகத்தை இசைக் கலைஞர்கள் வாசித்து அம்பாளுக்கு இசை ஆலாபனை செய்தனர். நிருதி ஆலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுர 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.