விழுப்புரம்: அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை எல்.இ.டி திரையில் பக்தர்கள் கண்டு ரசித்தும் சிறப்பு யாகங்கள் செய்து ஜெய் ஸ்ரீ ராம் என்று அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். 


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று பிரதிஷ்டை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ராமர் பிரதிஷ்டியை நேரிடையாக மக்கள் காணும் வகையில் பல்வேறு கோவில்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இருநூற்றுக்கும்  மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி திரைகள், பெரிய திரை கொண்ட  டிவிக்கள் மூலம் ராமர் பிரதிஷ்டியை காண ஏற்பாடு செய்யபட்டு அதன் வழியாக பக்தர்கள்  கண்டு களித்தனர்.


விழுப்புரம் நகர பகுதியான காமராஜர் வீதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று அகல் விளக்கேற்றி எல்இடி திரையில் ராமர் பிரதிஷ்டையை கண்டு களித்தனர். இதே போன்று சங்கர மடத்தில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொலைக்காட்சியில் ராமர் பிரதிஷ்டை ஒளிப்பரப்பினை நேரலையாக பெரிய டிவிக்கள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை ரயில் பயணிகள் கண்டு களித்தனர்.


அயோத்தி குழந்தை ராமர்


அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.


மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.


ஷியாமல் (கருப்பு நிறம்) கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 150 கிலோ எனக் கூறப்படுகிறது. சிலையின் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கோயிலின் தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளம் இன்னும் கட்டப்படவில்லை. முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அங்கு வைக்கப்பட உள்ளது.