2026 Maha Shivratri: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் ராஜயோகங்கள்.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?
மஹா சிவராத்திரி நாளான பிப்ரவரி 15ம் தேதி 11 வகையான சுபயோகம் நிகழப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா தடைகளும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது

மகா சிவராத்திரி சிவனுக்குரிய மிக முக்கியமான விசேஷ தினங்களில் ஒன்றாகும். ஆன்மிகத்தில் முழு முதற் கடவுளாக பார்க்கப்படும் சிவபெருமான் ஜோதி பிழம்பாக காட்சியளித்த நாளாக சிவராத்திரி பார்க்கப்படுகிறது. அதாவது படைக்கும் கடவுள் பிரம்மாவுக்கும், காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது அவர்களின் அகந்தையை ஒழிக்க நினைத்த சிவபெருமான் ஜோதி பிழம்பாக தோன்றி தன்னின் அடிமுடி அறியா வண்ணம் காட்சியளித்த நாள் மகா சிவராத்திரியாக அறியப்படுகிறது.
இந்த விசேஷம் வாய்ந்த நாளானது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும். அந்த வகையில் 2026ம் ஆண்டு மகா சிவராத்திரி பண்டிகையானது பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்று மாலை 5.51 மணிக்கு சதுர்த்தசி திதி தொடங்குகிறது. இந்த தியானது பிப்ரவரி 16ம் தேதி மாலை 6.26 மணிக்கு நிறைவடையும். இதன் காரணமாக பிப்ரவரி 15ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 16ம் தேதி காலை 6 மணி வரை சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
அன்று கோயில்களில் நான்கு யாம பூஜைகள் நடைபெறும். இதில் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வுகள் எல்லாம் தடைகள் நீங்கி கைகூடும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த நிலையில் 2026ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று சுமார் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மங்களகரமான யோகங்கள் நிகழப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
என்னென்ன யோகங்கள் நிகழும்?
மஹா சிவராத்திரி நாளான பிப்ரவரி 15ம் தேதி 11 வகையான சுபயோகம் நிகழப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்று காலை 5.45 மணி முதல் நாள் முழுவதும் நீடிக்கும் சிவனுக்கு மிகவும் உகந்த சிவயோகம் வருகிறது. அதேபோல் காலை 6.43 மணி முதல் 9.37 மணி வரை அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொடுக்கும் சர்வார்த்த சித்தி யோகம் நிகழும்.
மூன்றாவதாக அன்பு, நட்பின் சக்தியை அடையாளப்படுத்தும் வகையில் காலை 11.19 மணி முதல் 11.23 மணி வரை ப்ரீதி யோகமும், நீண்ட ஆயுளை தரும் ஆயுஷ்மான் யோகம் நண்பகல் 12.17 மணி முதல் பிப்ரவரி 16 அதிகாலை 1.54 மணி வரையும், செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டத்தின் குறியீடாக பார்க்கப்படும் சௌபாக்ய யோகம் மாலை 5.07 மணி முதல் மாலை 5.53 மணி வரையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதியை அள்ளித்தரும் ஷோபன யோகம் இரவு 7.47 மணி முதல் இரவு 8.34 மணி வரையும், நினைத்ததை முடிக்கும் சாத்தியம் யோகம் இரவு 8.54 மணி முதல் இரவு 10.02 மணி வரையும், இரவு 10.42 மணி முதல் இரவு 11.58 மணி வரை வளர்ச்சிக்குரிய சுக்ல யோகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் புதாதித்ய ராஜ யோகம், லட்சுமி-நாராயண யோகம், சுக்ராதித்ய யோகம், சாஷ ராஜ யோகம், சதுர்கிரஹி யோகம் ஆகிய அபூர்வ ராஜயோகங்கள் வருகிறது. இதனால் 12 ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் செல்வம், செழிப்பு, லாபம் போன்றவை கிட்டும் என நம்பப்படுகிறது.
உறுதியான மனநிலை உடைய துருவ யோகம் பிப்ரவரி 15ம் தேதி அதிகாலை 2.57 மணி முதல் பிப்ரவரி 16ம் தேதி அதிகாலை 5.53 மணி வரையும், வியாதிபாதம் மற்றும் வாரியான் யோகம் ஆகியவையும் அன்றைய நாளில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு பொறுப்பேற்காது)





















