ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கை திருக்கோயில் அத்தனை விசேஷமானது. குறிப்பாக மார்கழி மாதத்தின் திருவாதிரை நாளில், ஆடலரசனைத் தரிசிக்க பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அதே போன்று இன்று ஆருத்ரா விழாவில் மரகத நடராஜரைக் காண ஏராளமான பக்தர்கள் கூடியிருந்து, தரிசனம் செய்தனர்.


ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயில் வளாகத்தில் ஒற்றைக்கல் மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் பூசிய சந்தனத்துடன் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் சிலை மீது பூசிய சந்தனக்காப்பு களையப்படும்.


ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனக்காப்பு களையப்பட்டு, அதன் பின்னர் சந்தனம், மஞ்சள், தேன், பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், விபூதி, எண்ணெய், பஞ்சார்மிர்தம் உள்பட 32 வகை திரவிய அபிஷேகம் மூலவருக்கு நடைபெற்றது.




மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 11 மணியளவில் மூலவர் மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நடராஜர் சிலை மீது மீண்டும் சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மூலவரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.