ஆடி மாதம் என்றாலே அத்தனை சிறப்புகள் நிறைந்தது. ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு ஆகும்.


ஆடிப்பெருக்கு என்றால் என்ன? | What is Aadi Perukku 


தென்மேற்கு பருவமழை காலம் என்பது மிகவும் மிக, மிக முக்கியமான பருவமழை காலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலம் ஆடி மாதத்தில் தீவிரமாக வலுவடையும். அவ்வாறு வலுவடையும் தென்மேற்கு பருவமழை காரணமாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றில் புது வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும். அப்படி காவிரியில் புது வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருவதையே ஆடிப்பெருக்கு என்று கூறுவார்கள்.


ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும்.  ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள்.


காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி வரும் இந்த நாளில் உழவர்கள் விதை விதைத்து புதிய பருவத்திற்கான விவசாயத்தை தொடங்குவார்கள். இதையே ஆடிப்பட்டம் தேடி விதை என்றும் நமது முன்னோர்கள் கூறினார்கள். அந்த நாளில்தான் நெல், கரும்பு போன்ற பயிர்கள் விதை, விதைப்பதற்கான பணிகள் தொடங்குவார்கள். அப்போதுதான், தை மாதம் அறுவடை செய்ய ஏதுவாக இருக்கும்.


களை கட்டும் கொண்டாட்டம்:


தமிழ்நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஆடிப்பெருக்கு உள்ளது. ஆடிப்பெருக்கு பண்டிகையை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடினாலும், காவிரி கரைபுரண்டு ஓடும் மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி, குளித்தலை. திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய பகுதிகளில் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடுவார்கள்.


பெண்களுக்கு தனிச்சிறப்பு:


ஆடிப்பெருக்கு பண்டிகை என்றாலே பெண்களுக்கு கொண்டாட்டமான நாள் என்றே கூறலாம். அன்றைய நாளில் மேலே கூறிய பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை பகுதிகளில் அல்லது குளக்கரை பகுதிகளில் உள்ள படித்துறை பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பெண்கள் குவிவார்கள். புதுமணத் தம்பதிகள், திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் அனைவரும் படித்துறைகளில் குவிவார்கள்.


அங்கு அவர்கள் வாழை இலையில் பூக்கள், பச்சரிசி,  மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, தேன், பச்சரிசி மாவு, பன்னீர் ஆகியவற்றை கொண்டு காவிரித்தாய்க்கு படைத்து வணங்குவார்கள். மேலும், வெண்பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல் செய்தும் இறைவனை வணங்குவார்கள். விவசாயம் பெருக வேண்டும் என்பதற்காக நீருக்கு நன்றி கூறும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி ஆற்றில் விடுவதும் வழக்கம் ஆகும். சிலர் ஆடிப்பெருக்கு தினத்தில் குடும்பங்களுடன் கடற்கரைகளில் அமர்ந்து நிலாசோறு சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.


தாலி பிரித்து கோர்ப்பு | Thali Perukku Function


ஆடிப்பெருக்கு தினத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தாலி பிரித்து கோர்ப்பதே ஆகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி 18 என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். படித்துறைகளில் குவியும் புதுமணத் தம்பதிகளில் மனைவிமார்களுக்கு அவர்களது கணவன்மார்கள் தாலியை பிரித்து மஞ்சள் கயிற்றில் மங்களகரமான புது தாலியை அணிவிப்பார்கள்.


புதுமணத் தம்பதிகள் மட்டுமின்றி ஆடிப்பெருக்கு அன்று திருமணமான சுமங்கலி பெண்களும் தங்களது புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றிக் கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து வழிபாடு மேற்கொள்வார்கள்.


இத்தகையை சிறப்பு வாய்ந்த ஆடிப்பெருக்கு நாளை நீங்களும் குடும்பத்துடன் கொண்டாடி அனைத்து வளமும் பெற்று மகிழுங்கள்.


மேலும் படிக்க:Aadi Month 2023: ஆடி மாதம் எப்போது தொடக்கம்? ஆடி மாத பண்டிகைகள் என்னென்ன? எப்போது? - முழு விவரம்


மேலும் படிக்க: Aadi Month 2023: ஆடி மாதம் பிறந்தது எப்படி? வேப்பமரம் பூமிக்கு வந்தது எப்படி? புராணங்கள் சொல்வது இதுதான்..!