பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விஜய் டிவி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பட்டியலில் ரோபோ சங்கரும் ஒருவர். விஜய் டிவியில் மிமிக்ரி, ரோபோ நடனம் என தனது திறமைகளை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பரிட்சயமானார். பின்னர் சினிமா வாய்ப்புகள் கதவை தட்ட தனுஷின் மாரி, விஷ்னு விஷாலின் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து தோற்றத்தில் வேறுபட்டு காணப்பட்டார் ரோபோ சங்கர். இதனையடுத்து நீர்ச்சத்து குறைபாடு குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கும் அவருக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் நேற்று முந்தினம் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்ததால் அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் தற்போது காலமானார்.கடந்த வாரம் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்த ரோபோ சங்கர் இன்று இந்த உலகை விட்டு பிரிந்த செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.