Ponniyin Selvan 2 Review: நந்தினியின் சூழ்ச்சி..சோழர்களின் எழுச்சி..எப்படியிருக்கு பொன்னியின் செல்வன் 2? குட்டி விமர்சனம் இதோ!
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான விமர்சனத்தை இங்கு காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“அருண் மொழி வர்மனின் நிலை என்ன ஆனது..” என்ற கேள்வியோடு பொன்னியின் செல்வன் முதல் பாகம் முடிந்தது. அந்த கதையே, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் தொடர்கிறது.
நந்தினி - ஆதித்ய கரிகாலன் தொடர்பான சிறு வயது காதல் காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. பின் முதல் பாகத்தைப் போல கமல்ஹாசன் பின்னணி குரலுடன் இந்த பாகத்திற்கான கதை சொல்லப்படுகிறது.
ஒருபுறம் வீரபாண்டியனின் சாவுக்கு பழிதீர்க்க பாண்டிய ஆபத்துதவிகள் உதவியுடன் சோழ பேரரசை அழிக்க நந்தினி நினைக்கிறாள். இதனால், ஆதித்த கரிகாலன் நந்தினியை சந்திக்க கடம்பூருக்கும், அருண்மொழிவர்மன் தஞ்சைக்கும் செல்கிறார்கள்.
மறுபக்கம் ராஷ்ட்ரகூட மன்னன் கோத்திகன் தஞ்சையை தாக்க ஒரு பெரும்படையை திரட்டுகிறான். அதற்கு கண்டராதித்தரின் மகன் மதுராந்தகனின் உதவி நாடப்படுகிறது.
சோழ நாட்டை உடைக்க நினைக்கும் இவர்களின் எண்ணம் நிறைவேறியதா? .. உண்மையிலேயே ஊமை ராணி யார்? போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக வருகிறது படத்தின் மீதி கதை.
70 ஆண்டு கால முயற்சியில் இப்படி ஒரு வரலாற்று காவியம் முதல்முறையாக கண்முன்னே சாத்தியப்படுத்தப் பட்டுள்ளது. அதற்காக அனைத்து நடிகர்களும் தங்கள் முழு உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். சொல்லப்போனால் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள்.
3 மணி நேர படத்தில் முதல் பாகத்தில் எழுந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து விட வேண்டும் என்ற முனைப்பு தெரிகிறது. சில இடங்களில் மட்டும் காட்சிகள் வேகமாக செல்கிறது.
வந்தியதேவன் - குந்தவை, ஆதித்ய கரிகாலன் - நந்தினி இடையேயான உரையாடல்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் சில இடங்களில் மேஜிக் நிகழ்த்தி இருக்கிறார்.
சில காட்சிகள் புல்லரிக்க செய்யும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது. இப்படி சவால் நிறைந்த ஒரு நாவலை இரண்டு பாகங்களாக படமாக எடுக்கும்போது நிறை, குறைகள், நாவல் படித்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போவது போன்றவை இருக்கலாம். நிறை, குறைகள் தாண்டி இத்தனை ஆண்டு தமிழ் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களின் கனவை இந்தப் படம் நிறைவேற்றியுள்ளதற்காகவே குடும்பமாக திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -